299

1கிளவித்தொகை வகைகளின் பொருள்

களவியல்
கிளவித்தொகை - 17.

சூ. 123.

1. இயற்கைப்புணர்ச்சி - ஊழினால் தலைமகன், தலைமகளை எதிர்ப்பட அவ்விருவரும் மனமியைந்து தாமே கூடுதல்.

2. வன்புறை - தலைவி ஐயுற்ற வழித் தலைவன் ஐயுறவு தீர வற்புறுத்திக் கூறல். வன்பு - வலிமை, உறை - உறுத்தல்.

3. தெளிவு - தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய் எனத் தெளிந்து ஆற்றுதல்.

4. பிரிவுழி மகிழ்ச்சி - தலைவி பிரிந்து போகும்போது அவள் போகின்ற தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்.

5. பிரிவுழிக் கலங்கல் - தலைவி பிரிந்தபோது தலைவன் கலங்கிக் கூறல்.

6. இடந் தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து சென்ற தலைமகன் அடுத்த நாள் அவ்விடத்தே வந்து தலைமகளைக் கூடுதல்.

7. பாங்கற் கூட்டம் - மூன்றாம் நாள் பாங்கனாற் கூடும் கூட்டம்.

8. பாங்கிமதி உடன்பாடு - பாங்கி, தலைவியின் வேறுபாடு கண்டு புணர்ச்சி உண்மை அறிந்து ஆராய்ந்து தன் மதியை உடன்படுத்தல்.

9. பாங்கியிற் கூட்டம் - பாங்கி கூட்டி வைக்கத் தலைவன் தலைவியைக் கூடுதல்.

10. (i) பகற்குறி - தலைவன் தலைவியைப் பகற்குறியிற் கூடுதல்.
(ii) ஒருசார் பகற்குறி - ஒரு கூற்றுப் பகற்குறி ;அதாவது, 'மற்றைநாள் தலைவன் தன் வேட்கை மிகுதியால் பகற்குறி இடத்து வந்து நிற்கப் பாங்கி குறிக்கண் தலைவியைச் செலுத்தாது மறுத்துக் கூறத் தலைவன் வருந்திப் போதல்.

11. பகற்குறி இடையீடு - பகற்குறிக்கண் வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடுபட்டுப் போதல்.

12. இரவுக்குறி - தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல்.


1. இவற்றுள், கிளவித் தொகைகளுக்குப் பொருள் தஞ்சை வாணன் கோவை உரையை நோக்கியும், வகைகளுக்குப் பொருள் தஞ்சைவாணன் கோவை உரையையும், இந்நூலுக்கு அ. கு.அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையையும் அந்த வகைகளுக்குரிய கிளவிகளையும் நோக்கி எழுதப் பெற்றன. வகைகளுக்கு எழுதப்பெற்ற பொருள்களுள் பெரும்பான்மையன அந்த அந்த வகைகளுக்குரிய கிளவிகளை நோக்கியே எழுதப்பெற்றன.