13. இரவுக்குறி இடையீடு - எட்டாம்நாள் இரவுக்குறிக்கண் வந்த தலைமகன் அல்ல குறிப்படுதலால் இடையீடு பட்டுப் போதல். 14. வரைதல் வேட்கை - இவ்வாறு இடையீடு பட்டதனால் பத்தாம் நாள் தலைவி வரைதல் வேட்கையாற் கூறுதல். 15. வரைவு கடாதல் - பாங்கி தலைவனொடு வரைவு கூறி வினாதல். 16. ஒருவழித் தணத்தல் - வரைவு கூறிய பாங்கியொடு வரைதற்கு உடன்பட்ட தலைவன் தன் ஊர்க்கு ஒருவழிப்போய் வருகின்றேன் என்று கூறிப் போதல். 17. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் - வரைவை இடையிலே வைத்து, வரைதற்கு வேண்டும் பொருள் காரணமாகப் பிரிதல். வகை இயற்கைப் புணர்ச்சியில் தலைவியிற் புணர்ச்சியின் வகை - 4 சூ. 126. (இயற்கைப் புணர்ச்சியின் மற்றொரு பகுதியாகிய தெய்வப் புணர்ச்சிக்கு வகை இல்லை; கிளவிகள் மாத்திரம் உள.) 1. வேட்கை உணர்த்தல் - தலைவிக்குத்தலைவன் தன் வேட்கையைத் தெரிவித்தல். 2. மறுத்தல் - தலைவி மறுத்தல். 3. உடன்படல் - தலைவி கூட்டத்திற்கு இணங்கல். 4. கூடல் - தலைவியைத் தலைவன் கூடுதல்.
வன்புறையின் வகை - 2. சூ. 128. 1. ஐயந்தீர்த்தல் - தலைவிக்குண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்தல். 2. பிரிவுறுத்தல் - தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல்.
தெளிவின் வகை - 1. சூ. 130. 1. தலைவன் மாற்றம் தலைவி தேற்றம் - தலைமகன் சொல்லைத் தலைவி தெளிதல்.
பிரிவுழி மகிழ்ச்சியின் வகை - 2. சூ. 131. 1. செல்லுங் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் - செல்லுந் தலைவி செல்லுந் தன்மையைக் கண்டு தலைவன் தன் மனத்தோடு சொல்லுதல். 2. செல்லுங் கிழத்தி செலவு கண்டு பாகனொடு சொல்லல் - தலைவி செல்லும் தன்மையைக் கண்டு தலைவன் பாகனொடு சொல்லுதல்.
|