பிரிவுழிக் கலங்கலின் வகை - 2. சூ. 132. 1. மருள் உற்றுரைத்தல் - தலைவியை ஆய வெள்ளம் வழிபடக் கண்டு இத்தகையாளை நாம் கூடப்பெற்றது என்ன வியப்பு எனத் தலைவன் மயங்கிக் கூறுதல். 2. தெருள் உற்றுரைத்தல் - தலைவன் தெளிவுபெற்றுக் கூறுதல். இடந்தலைப்பாட்டின் வகை - 3. சூ. 134. 1. தெய்வம் தெளிதல் - முன்னே நமக்கவளைக் கூட்டி வைத்த தெய்வம் பின்னும் கூட்டிவைக்கும் எனத் தெளிந்து செல்லுதல். 2. கூடல் - தலைவன் தலைவியைக் கூடுதல். 3. விடுத்தல் - தலைவன் தலைவியை ஆயத்தின்பாற் செல்ல விடுத்தல். பாங்கற் கூட்டத்தின் வகை- 7. சூ. 136. 1. சார்தல் - தலைவன் தன் பாங்கனைச் சேர்தல். 2. கேட்டல் - பாங்கன் தலைவனது வாட்டத்தைக் கண்டு உனக்கு யாதுற்றது என்று தலைவனை வினாதல். 3. சாற்றல் - தலைவன் வாட்டத்தின் காரணத்தைத் தெரிவித்தல். 4. எதிர்மறை - பாங்கன் நினக்கிது தகாது எனத் தலைவனை இடித்துரைத்தல். 5. நேர்தல் - தலைவன் சொற்படி தலைவியைச் சென்று கண்டு வந்த பாங்கன் தலைவன் கருத்திற்கு இசைதல். 6. கூடல் - தலைவன் சென்று தலைவியைக் கூடல். 7. பாங்கிற் கூட்டல் - நின் உயிர்ப்பாங்கியொடு வருக எனக் கூறித் தலைவன் தலைவியை அவள் பாங்கியர்பாற் செல்ல விடுத்தல். பாங்கி மதிஉடன்பாட்டின் வகை- 3. சூ. 138. 1. முன்னுற வுணர்தல் - பாங்கற் கூட்டத்துக்கண் தலைவி தலைவனைக் கூடி மீண்டுவந்து பாங்கி முன் உற்றவழிப் பாங்கி தலைவியின் வேறுபாட்டைக் கண்டு கூட்டம் உண்மை அறிதல். 2. குறையுற வுணர்தல் - தலைவன் தழையும் கண்ணியும் கொண்டு சென்று பாங்கியின் பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டம் உண்மை அறிதல். 3. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் - தலைவியும் தானும் ஒருங்கிருந்தபோது தலைவன் முன்போலத் தழையும் கண்ணியும் கொண்டுவரப் பாங்கி அதனானே கூட்டம் உண்மை அறிதல்.
|