304

புள்ளெழுப்புதல், நீரிற்கல்லெறிதல், இளநீர்வீழ்த்தல் முதலிய குறிகள் பிறிதொன்றனால் நிகழ்த்தப்படத் தலைவி குறிக்கண் வந்துதலைவனைக் காணாது சென்றாள். பிறகு தலைவன் அங்கு வந்து தலைவியைக் கூடப் பெறாமற் சென்றான்.இங்ஙனம் தலைவனால் நிகழ்த்தப்படுதற்குரிய குறிகள் பிறிதொன்றினால் நிகழ்த்தப்படுதலின் அஃது அல்ல குறியாயிற்று.

2. வருந்தொழிற்கருமை - தலைவன் இரவுக் குறிக்கண் வருவதற்கு இடையூறாகிய நிகழ்ச்சிகள் நிகழ்தல்.

வரைதல் வேட்கையின் வகை-3.

சூ. 163.

1. அச்சம் - தலைவி தலைவனை எய்துதற்கிடையூறான நிகழ்ச்சிகள் உண்டாகத் தலைவி அஞ்சுதல்.

2. உவர்த்தல் - பாங்கி தலைவனை, வெறுத்துக் கூறல். உவர்த்தல் - வெறுத்தல்.

3. ஆற்றாமை - தலைவன் வராமையைத் தலைவி பொறாமல் வருந்துதல்.

வரைவு கடாதலின் வகை - 4.

சூ. 165.

1. பொய்த்தல் - தோழியானவள் தலைவியைத் தலைவன் மணந்து கொள்ளும்படி செய்ய எண்ணித் தலைவனிடம் பொய்யாயினவற்றைத் தானே புனைந்து கூறுதல்.

2. மறுத்தல் - தலைவன் குறிக்கண் வருதலைத் தோழி குறிப்பாகவும், வெளிப்படையாகவும் மறுத்தல்.

3. கழறல் - தோழி, நீ தலைவியை மணந்துகொள்ளாமல் களவின்கண் ஒழுகுதல் நின்னாடு முதலியவற்றிற்கு ஏற்றது அன்றெனத் தலைவற்குக் கூறுதல்.

4. மெய்த்தல் - தோழி, தலைவனுக்கு மெய்யாயினவற்றைக் கூறுதல்.

ஒருவழித்தணத்தலின் வகை - 7.

சூ. 167.

1. செலவறிவுறுத்தல் - தலைவன் தான் ஒருவழித்தணந்து செல்லும் செலவைப் பாங்கிக்குத் தெரிவித்தலும், அவள் அதனைத் தலைவிக்குத் தெரிவித்தலுமாம்.

2. செலவுடன்படாமை - தலைவன் செலவைப் பாங்கி தடுத்தல்.

3. செலவுடன்படுத்தல் - தலைவன் தான் செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று கூறிப்பாங்கியை உடன்படச் செய்தல்.

4. செலவுடன்படுதல் - தலைவன் செல்வதற்குப் பாங்கி உடன்படல்.