5. சென்றுழிக் கலங்கல் - தலைவன் ஒருவழித் தணந்தபோது தலைவி மனங்கலங்கி வருந்தல். 6. தேற்றி யாற்றுவித்தல் - தோழி தலைவியின் மனந் தெளியும்படியான சொற்களைச் சொல்லி அவற்றால் அவள் துயர் ஆறும்படி செய்தல். 7. வந்துழி நொந்துரை - மீண்டு வந்த தலைவன்பாற் பாங்கி வருந்தி உரைத்தலும், தன் பிரிவினால் தலைவிக்கும் தோழிக்கும் உண்டாகிய துயரத்துக்காகத் தலைவன் வருந்தி உரைத்தலுமாம். வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலின் வகை- 9. சூ. 169. 1. பிரிவறிவுறுத்தல் - தலைவன் தான் வரைவிடை வைத்துப் பொருள் காரணமாகப் பிரிந்துபோவதைத் தலைவிக்குத் தெரிவிக்கும்படி தோழியிடங் கூறுதல். 2. பிரிவுடன்படாமை - தலைவன் பிரிந்து செல்லுதற்குப் பாங்கி உடன்படாமை. 3. பிரிவுடன்படுத்தல் - பாங்கி உடன்படுத்தற்குரிய சொற்களைச் சொல்லி அவளை உடன்படச் செய்தல். 4. பிரிவுடன்படுதல் - வரைவிடை வைத்துப் பொருள் காரணமாகத் தலைவன் செல்லுதற்குப் பாங்கி உடன்படுதல். 5. பிரிவுழிக்கலங்கல் - தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தபோது தலைவி மனங்கலங்கி வருந்தல். 6. வன்புறை - தோழி, தலைவிக்கு வற்புறுத்திக் கூறுதல். இது வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலின் வகைகளுள் ஒன்று. 153ஆம் சூத்திரத்தில் வந்த வன்புறையை நோக்குக. 7. வன்பொறை - வலிமையாகிய பொறை. தலைவன் பிரிவினால் உளதாகிய பொறுத்தற்கரிய துயரத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல். 8. வரும்வழிக் கலங்கல் - தலைவன் மீண்டு வரும் வழியில் தன் பிரிவால் தன் தலைவிக்கு உண்டாகக் கூடிய ஆற்றாமையை நினைந்து மனங்கலங்கிக் கூறுதல். 9. வந்துழி மகிழ்ச்சி - தலைவன் மீண்டு வந்தபோது தலைவி மகிழ்தல். வரைவியல்
   வரைவிற்குரிய கிளவித் தொகை - 2.
   சூ. 172. 1. வரைவு மலிதல் - வரைவு தொடங்கி நடக்கும் முயற்சி மிகுதல். 
 |