306

1. வரைவு மலிதல் - வரைவு தொடங்கி நடக்கும் முயற்சி மிகுதல்.

2. அறத்தொடு நிலை - களவை வெளிப்படுத்தி நிற்றல், இதற்கு இப்பொருள் இவ்விடத்து மாத்திரமே கோடற்குரியதாம்; எவ்விடத்துங் கோடற்குரியதன்று.

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித்தொகை - 3.

சூ. 180.

1. உடன்போக்கு - தலைவன் தன் ஊருக்குத் தலைவியைக் கொண்டு செல்லுதல்.

2. கற்பொடுபுணர்ந்தகவ்வை - தலைவி தலைவனுடைய உடைமையாய்க் கற்பொடு கூடி இருத்தலை அயலார் விரவிய சேரியினர் பலரும் அறிதல். கவ்வை - அலர்; வெளிப்பாடு.

3. மீட்சி - புதல்வியைத் தேடிச் சென்ற செவிலி மீண்டு வருதலும், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வருதலுமாம்.

வகை

வரைவுமலிதலின் வகை- 4.

சூ. 173.

1. வரைவுமுயல் வுணர்த்தல் - பாங்கி வரைவின் பொருட்டு நடக்கும் முயற்சியைத் தலைவிக்குத் தெரிவித்தல்.

2. வரைவெதிர் வுணர்த்தல் - தலைவன் தமர் மணங் கூறி வந்தபோது தலைவியின் தமர் மணம் எதிர்ந்தமையைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

3. வரவறிந்து மகிழ்தல் - தம்முடைய தமர் வரைவு எதிர்ந்ததனால் தலைவி மகிழ்தல்.

4. பராவல்கண் டுவத்தல் - மணம் நேர்ந்த தமர் ஏவலாய் தலைவி மணத்தின் பொருட்டு அணங்கைப் பராவுதல் கண்டு தலைவன் மகிழ்தல்.

அறத்தொடு நிலையின் வகை- 2.

சூ. 175.

1. முன்னிலைமொழி - முன்னிற் பார்க்கு நேரே கூறுதல்.

2. முன்னிலைப் புறமொழி - முன் நிற்பார்க்குக் கூற வேண்டுவனவற்றைப் பிறருக்குக் கூறுவார்போலக் கூறுதல்.

உடன்போக்கின் வகை- 8.

சூ. 181.

1. போக்கறிவுறுத்தல் - பாங்கி தலைவியை உடன்கொண்டு செல்லும்படி தலைவனுக்குச் சொல்லுதல்.

2. போக்குடன்படாமை - தலைவனும் தலைவியும் அதனை மறுத்தல்.

3. போக்குடன்படுத்தல் - உடன் கொண்டு செல்லுதலன்றித் தலைவிக்கு வேறு தஞ்சம் இன்மையைத் தலைவனுக்கும், கற்பின் மேன்மையைத் தலைவிக்குங் கூறி அவ்விருவரையும் உடன்போக்கிற்கு உடன்படும்படி செய்தல்.