4. உடன்படுதல் - உடன்போக்கிற்குத் தலைவனும் தலைவியும் சம்மதித்தல். 5. போக்கல் - தலைவனுடன் தலைவியைப் பாங்கி செல்லவிடல். 6. விலக்கல் - தலைவன் தலைவியின் தளர்ச்சி கண்டு அவளுடன் ஓரிடத்தில் தங்கியபோது கண்டோர் அன்பினாற் போக்கை விலக்கித் தங்கள் பாடியில் தங்கிச் செல்லும்படி கூறுதல். 7. புகழ்தல் - தலைவன் தலைவியை உவந்து கூறுதல். 8. தேற்றல் - கண்டோர் தலைவன்பதி அணிமையானமையைக் கூறி விடுப்பத் தலைவனுடன் சென்ற தலைவிக்குத் தன்பதி அடைந்ததனைக் கூறித்தலைவன் அவளைத் தேறச் செய்தல். கற்பொடு புணர்ந்த கவ்வையின் வகை- 5. சூ. 183. 1. செவிலி புலம்பல் - தன் புதல்வி காதலனுடன் சென்றதனை உணர்ந்து செவிலி புலம்பல். 2. நற்றாய் புலம்பல் - தன் புதல்வி காதலனுடன் சென்றதனை உணர்ந்து நற்றாய் புலம்பல். 3. கவர்மனை மருட்சி - நற்றாய் வீட்டின்கண் இருந்து வருந்துதல். 4. கண்டோர் இரக்கம் - தலைவியின் தோழிமார்களும், தாயும் வருந்துதலைக்கண்டோர் இரங்கிக் கூறுதல். 5. செவிலி பின்தேடிச் சேறல் -செவிலி தலைவியைப் பின்னே தேடிக்கொண்டு செல்லுதல். மீட்சியின் வகை- 4. சூ. 190. 1. தெளித்தல் - செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைவி நெடுந்தூரஞ் சென்றுவிட்டதனைக் கூறி, அவளைத் தெளிவித்தலும், உடன்போய் மீண்டு வருகையில் தலைவன் தலைவியினது ஊரை அடைந்தமையைக் கூறித் தலைவியைத் தெளிவித்தலுமாம். 2. மகிழ்ச்சி - தலைவிக்கு முன் செல்கின்றவர்கள் சென்று தலைவியின் வரவைப் பாங்கியர்க்குக் கூறப் பாங்கியர் மகிழ்தலும், பாங்கியர் சென்று நற்றாய்க்குக் கூற நற்றாய் மகிழ்தலுமாம். 3. வினாதல் - தன்மகள் காதலனுடன் வருகின்றாள் என்பதனைக் கேட்ட நற்றாய் நம் புதல்வியை நம்மனைக்கே கொண்டு வருவனோ? தன் நெடுநகர்க்கே கொண்டு செல்வனோ ? என்று வெறியாட்டாளனை வினாவுதல்.
|