4. செப்பல் - முன் சென்றோர் தலைவியின் வருகையைப் பாங்கியர்க்குச் சொல்லுதல். வரைவியலில் தன் மனைவரைதல், உடன்போக் கிடையீடு, வரைதல் என மற்றும் மூன்று உள்ளன. களவியலில், 123ஆம் சூத்திரத்தான் இயற்கைப் புணர்ச்சி முதல் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் வரையிலும் உள்ளபதினேழும், வரைவியலில் 172ஆம் சூத்திரத்தானும் 180ஆம் சூத்திரத்தானும் வரைவு மலிதல் முதல் மீட்சி வரையினும் உள்ள ஐந்தும், கற்பியலில் 201ஆம் சூத்திரத்தான் இல்வாழ்க்கை முதல் பொருள்வயிற்பிரிவு வரையினும் உள்ள ஏழும் கிளவித்தொகை எனக் கூறப்பட்டன. மேலே கூறப்பட்ட தன்மனை வரைதல் முதலிய மூன்றும் கிளவித்தொகை எனக் கூறப்பட்டில. ஆனால், அவற்றுள் தன்மனை வரைதல், உடன்போக்கிடையீடு என்னும் இரண்டற்கும் வகைகளும், கிளவிகளும் உள. தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர் வரைவியலின் உரைப்பாயிரத்துள்,"ஆதியில் எடுத்துக் கோடற் கண்ணே களவு என்றும், கற்பு என்றும் கைகோள் இரண்டென வைத்து அவ்விரண்டுக்கும் நடுவே வரைவியல் என ஒன்று கூறியவதனால் முன்னதனோடு மாறுகொள்ளும் எனின்? மாறுகொள்ளாது. என்னை? கற்பிற்கு நிமித்தமாய வரைவுகூறுதலின் இதுவும் கற்பின்பாற்படும். ஆயின், இதனைக் கற்பின்பாற் படுத்துக் கூறாது வரைவியல் என வேறாகக் கூறியது என்னை எனின், வரைவு மலிவு முதலாக உடன்போக்கிடையீடு ஈறாகப் பலவகைப்பட்டு ஒவ்வோர் வகைக்குங் கிளவிகளும் பலவாக அதிகாரப்பட்டு நடத்தலின் விளங்குதற்கு வரைவியல் என்று வேறு கூறப்பட்டது." என்று கூறினர். ஆதலின், கிளவித்தொகை வகைகளின் பொருள் கூறப்படும் இவ்விடத்துத் தன்மனை வருதல் முதலிய இம் மூன்றும் வைக்கப்பெற்று, இவற்றிற்கும் இவற்றின் வகைகளுக்கும் பொருள் கூறப்பெறுவனவாயின. 6. தன்மனை வரைதல். 7. உடன்போக்கிடையீடு. 8.வரைதல் என முறை வகுத்திருப்பதுங் காண்க. சூ. 193. 1. தன்மனை வரைதல் - உடன்போய் மீண்டுவந்த தலைவன் தன்னூர்க்குத் தலைவியைக் கொண்டுசென்று தன் மனையின்கண் வரைந்து கொள்ளுதல். சூ. 197. 2. உடன்போக்கிடையீடு - சுற்றத்தினர் 'நம் மனையின்கண் வரைந்து கொள்ளாமல் தன்னூரின்கண் வரைந்தனன்' என்று வெறுப்படைதல் கண்டு தலைவன் தலைவியை உடன் கொண்டுபோகையில் தலைவியின் சுற்றத்தார் பின் தொடர்ந்து செல்லத் தலைமகளைத் தலைவன் விடுத்துச் செல்லுதல்.
|