41

(இ - ள்.) படைக்கலங்களைக் கற்றலும், யானையும் தேரும் குதிரையும் முதலாயின ஊர்தலும் மூவர்க்கும் உடைமையாகிய தொழிலெனச் சொன்னார் புலவர் என்றவாறு.

'பிற' என்றதனால் தேரும் குதிரையும் முதலாயினவுங் கொள்ளப்பட்டன. 'பகடுபிற' என்றது உம்மைத் தொகை.

(71)

காவற்பிரிவின் வகை

72. அறப்புறங் காவல் நாடுகா வலெனச்
சிறப்புறு காவற் றிறமிரு வகைத்தே.

(இ - ம்.) காவற்றொழிலின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அறப்புறங்காவலும், நாடுகாவலும் என இரு கூற்றதாம் மேம்பாடுற்ற காவற்றொழிலின் பாகுபாடு என்றவாறு.

(72)

அறப்புறங் காவற்கு உரியார்

73. அவற்றுள்,
அறப்புறங் காவல் அனைவர்க்கு முரித்தே.

(இ - ம்.) அறப்புறம் காவற்றன்மை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற் சொல்லிய இரண்டனுள்ளும் அறப்புறங் காவல் என்பது நால்வர்க்கு முரித்து என்றவாறு.

(73)

நாடுகாவலுக்கு உரியார்

74. மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே.

(இ - ம்.) நாடுகாவற்றன்மை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நாடுகாவலென்பது அரசர்க்குரித்து என்றவாறு.

(74)

தூதிற் பிரிவுக்கு உரியார்

75. வேத மாந்தர் வேந்தரென் றிருவர்க்கும்
தூது போதற் றொழிலுரித் தாகும்.

(இ - ம்.) தூது போதற் றொழிலின் தன்மை உணர்த்துதல் நுதலிற்று.