(இ - ள்.) பார்ப்பாரும் வேந்தரும் என்னும் இருவர்க்கும் உரித்தாந் தூதுபோதற்றொழில் என்றவாறு. பகைதணிவினை எனினும், தூதுவினை எனினுமொக்கும். 1"வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே" என்பதனாலும், 2"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சங் கடந்தானை நூற்றுவர்பா னாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நாராய ணாவென்னா நாவென்ன நாவே" என்பதனாலும் அவ்விருவர்க்குந் தூது போதற் றொழில் உரித்தாயினவாறு காண்க. (75) நாடுகாவற்பிரிவுக்கும் தூதிற்பிரிவுக்கும் ஒரு சிறப்புவிதி 76. சிறப்புப் பெயர்பெறிற் செப்பிய இரண்டும் உறற்குரி மரபின ஒழிந்தோ ரிருவர்க்கும். (இ - ம்.) நாடுகாவற்றொழிற்கும், தூதுபோதற்றொழிற்கும் உரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அரசனாற் சிறப்புப் பெயர் பெற்றாராயின், வைசியரும், சூத்திரரும் என்னுமிருவர்க்கும் மேற்கூறிய நாடு காவற்றொழிலும் தூதுபோதற்றொழிலும் ஆகிய இரண்டும் பொருந்துதற்குரிய மரபினவாம் என்றவாறு. உரிய மரபென்பது விகாரம். (76) துணைவயிற் பிரிவுக்கு உரியார் 77. உதவி அந்தண ரொழிந்தோர்க் குரித்தே. (இ - ம்.) உதவியிற்றொழிலுரிமை உணர்த்துதல் நுதலிற்று.
1. புறநானூறு. செய்யுள்; 305. 2. சிலப்பதிகாரம், 17: படர்க்கைப் பரவல், செ. 3.
|