(இ - ள்.) வேந்தர்க்குற்றுழியாகிய தொழில் அந்தணரொழிந்த மூவர்க்கும் உரித்தாம் என்றவாறு. (77) நான்கு வருணத்தார்க்கும் உரிய பிரிவு 78. பரத்தையிற் பிரிவும் பொருள்வயிற் பிரிவும் உரைத்த நால்வர்க்கு முரிய வாகும். (இ - ம்.) நால்வர்க்கும் பொதுவாகிய தொழில் இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பரத்தையிற் பிரிவும், பொருள்வயிற் பிரிவுமாகிய இரண்டும் மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கும் உரியவாம் என்றவாறு. (78) நிலமக்களுள் தலைமக்களுக்கு உரிய பிரிவு 79. இழிந்தோர் தமக்கும் இவற்றுண்மேம் பட்டவை ஒழிந்தன வாமென மொழிந்தனர் புலவர். (இ - ம்.) 2நிலமக்களுள், தலைமக்கட்குரிய தொழில் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இவ்வறுவகைத் தொழிலுள்ளும் மேம்பட்டனவாகிய ஓதலும், நாடு காவலும், தூதுபோதலும், ஆகிய மூன்றுமொழித்து அல்லாதனவெல்லாம் இழிந்தோராகிய நிலமக்களுள் தலைமக்கட்கும் உரியவாமெனச் சொன்னார் அறிவோர் என்றவாறு. (79) தலைமகன் பிரிவுக்கு இலக்கணம் 80. கல்வி 3முதலா எல்லா வினைக்குஞ் சொல்லி அகறலுஞ் சொல்லா தகறலும் உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு. (இ - ம்.) பிரியுந் தலைமகற்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கல்வி முதலாகிய 4எல்லா வினைக்குந் தலைமகட்குச் சொல்லிப் பிரிதலும், சொல்லாது பிரிதலும் உரியன் தலைமகன் என்றவாறு. (80)
1. பொருள் வயிற் பிரிவில் பாகுபாடு இன்மையான் அதனைத் தனியாக எடுத்துக் கூறிற்றிலர். 2. குறிஞ்சி முதலிய நிலத்து மக்கள். 3. முதலா மெல்லா வினைக்கும் என்றும் பாடம். 4. ஐந்து வினைக்கும் என்றும் பாடம்.
|