இதுவுமது 81. சொல்லா தகலினுஞ் சொல்லும் பாங்கிக்கு. இதுவுமது. (இ - ள்.) தலைமகன் தலைமகட்குச் சொல்லாது பிரியும், ஆயினுந் தோழிக்குச் சொல்லியே பிரியும் என்றவாறு. (81) இதுவுமது 82. குறிப்பின் உணர்த்தும் பெறற்கருங் கிழத்திக்கு. இதுவுமது. (இ - ள்.) தலைவன் பிரிவுரையாது செல்லுமாயினும் குறிப்பின் உணர்த்துந் தலைவிக்கு என்றவாறு. (82) தலைமக்கள் நாடிடையிட்டுச் செல்லுங்கால் செல்லுந்திறன் 83. காலிற் சேறலும் கலத்திற் சேறலும் ஊர்தியிற் சேறலும் நீதி யாகும். (இ - ம்.) பிரியுங் காலத்து நால்வர்க்கும் பொதுவாகியது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காலிற்சேறல் முதலாகிய மூன்றும் எல்லாப் பிரிவின்கண்ணும் எல்லார்க்கு மியல்பாம் என்றவாறு. (83) அங்ஙனம் செல்லுதற்கண் அந்தணர்க்கு உரிய சிறப்புவிதி 84. புலத்திற் சிறந்த புரிநூன் முதல்வர்க்குக் கலத்திற் சேறல் கடனன் றென்ப. (இ - ம்.) அந்தணர்க்கு ஆகாத தொழில் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காலிற்சேறல் முதலாகிய மூன்றுள்ளும் கலத்திற் சேறலாய தொழில் கல்வியினான் மிக்க அந்தணர்க்கு முறைமை அன்றென்று சொல்லுவர் என்றவாறு. (84) அரசர்முதலிய தலைமக்கள் குலமாதரொடு செல்லற்கு ஆகாதவை 85. வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் குலமட மாதரொடு கலமிசைச் சேறலும் பாசறைச் சேறலும் பழுதென மொழிப.
|