45

(இ - ம்.) அரசர் முதலாகிய மூவர்க்கும் ஆகாத தொழில் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) குலமடமாதரொடு கலமிசைச்சேறலும், குலமடமாதரொடு பாசறைச்சேறலுமாகிய இரண்டும் வெற்றியுயர்ந்த சிறப்பினையுடைய வேந்தர் முதலாகிய மூவர்க்குங் குற்றம் என்று சொல்லுவர் கற்றுவல்லோர் என்றவாறு.

குலமடமாதர் என்பதனை ஈரிடத்துங் கூட்டிக்கொள்க.

"மணன்மலி பூங்கானல் வருகலன்க ணோக்கிக்
கணவன்வரக் கல்லுருவ நீத்தாள்"

என்பதனாற் குலமடமாதரொடு கலமிசைச்சேறலாகாமை அறிக.

"பனியிருங் கங்குலுந் தமிய ணீந்தித்
தம்மூ ரோளே நன்னுதல் யாமே
........இரவுத்துயின் மடிந்த தானை
உரவுச்சின வேந்தன் பாசறை யோமே"

என்பதனாற் குலமாதரொடு பாசறைக்கட் செல்லாமை அறிக. 'குலமாதரொடு செல்லார்' எனவே, பரத்தையரோடு செல்வரென்பது பெற்றாம்.

"துயிலின்றி யானீந்தத் தொழுவையம் புனலாடி
மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ
வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற்
குயிலாலும் பொழுதெனக் கூறுந ருளராயின்"

என்பதனாற் பரத்தையரோடு பாசறைக்கட் சென்றவா றறிக. ஏனையது வந்தவழிக் கண்டுகொள்க.

(85)

தலைமகன் செலவழுங்கலும் உண்டு என்பது

86. ஓதல் முதலாகிய ஓதிய ஐந்தினும்
பிரிவோன் அழுங்கற்கும் உரிய னாகும்.

(இ - ம்.) தலைமகற்குப் பிரிவிடத்துரிய வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஓதல் முதலாகச் சொல்லப்பட்ட ஐந்தன்கண்ணும் பிரியுந் தலைமகன் போதற்கேயன்றிப் போகாமைக்கும் உரியனாம் என்றவாறு.

(86)


1. சிலப்பதிகாரம் , 21: வஞ்சின மாலை, வரி: 6, 17.