செலவழுங்கற்கு உரிய இடம் 87. இல்லத் தழுங்கலும் இடைச்சுரத் தழுங்கலும் ஒல்லும் அவற்கென உரைத்திசி னோரே. இதுவுமது. (இ - ள்.) பிரியக் கருதிய தலைமகன் அவ்வில்லின் கண்ணே செலவழுங்குதலும், இடைச்சுரத்தின்கண்ணே செலவழுங்குதலும் பொருந்துமெனக் கூறினார் புலவர் என்றவாறு. இவற்றுக்கிலக்கியம்: 1"புணரிற் புணராது பொருளே பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே யாயிடைச் சேரினுஞ் செல்லா யாயினும் நல்லதற் குரியை வாழியென் நெஞ்சே பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியிற் கெடுவ யானே விழுநீர் வியலகந் தூணி யாக வெழுமா ணளக்கும் விழுநிதி பெறினுங் கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தன னெனைய தாகுக வாழிய பொருளே" எனவும், 2"புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி னிறங்கிளர் நிரையிதழ்ப் பொலிந்த வுண்க ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சே செல்ல றீர்கஞ் செல்வா மென்னுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிழிவுதலைத் தருமென உறுதி தூக்கத் தூங்கி யறிவே சிறிதுநனி விரைய லென்னு மாயிடை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே"
எனவும் வரும். (87)
1, 2. நற்றிணை. 16; 284.
|