47

செலவழுங்கற்குக் காரணம்

88. தலைவி தன்னையும் தன்மனந் தன்னையும்
அலமர லொழித்தற் கழுங்குவ தல்லது
செல்வத் தோன்றல் செல்லா னல்லன்.

(இ - ம்.) எய்தியது விலக்குவதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இல்லகத்துத் தலைமகளையும் தன்னெஞ்சினையும் தேற்றுதல் காரணமாகவும், இடைச்சுரத்துத் தன்னெஞ்சினைத் தேற்றுதல் காரணமாகவும் அழுங்குதல் மாத்திரமல்லது தலைமகன் போகானல்லன் என்றவாறு.

இல்லகத்துத் தலைமகளைத் தேற்றுதற்குச் செய்யுள்:

1"பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாத ருண்கணும் வனப்பின் றோளு
மிவைகாண்டோறு மகமலிந் தியானு
மறநிலை பெற்றோ ரனையே னதன்றலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத் திலனே நினையின்
யாதனிற் பிரிவா மடந்தை
காத றானுங் கடலினும் பெரிதே"

என வரும். பிறவுமன்ன.

(88)

ஓதற்பிரிவுக்குக் காலவரையறை

89. அவற்றுள்,
ஓதற் பிரிவுடைத் தொருமூன் றியாண்டே.

(இ - ம்.) ஓதற்பிரிவுக்கு யாண்டு வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட பிரிவுகளுள் ஓதற்குப் பிரியும் பிரிவு மூன்றியாண்டெல்லையினை உடையது என்றவாறு.

என்னை?

2"வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது" என்றாராகலின்.

(89)


1. நற்றிணை, 166.

2. தொல், பொருள், கற்பியல், சூ: 47.