49

நாளுந் தலைமகளைப் பிரியப்பெறான் பூப்பு நிகழுங் காலத்து என்றவாறு.

என்னை?

1"பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான" எனவும்.

2"தீண்டாநாண் முந்நாளு நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளு மிகவற்க வென்பவே
பேரறிவாளர் துணிவு"

எனத் தொல்காப்பியனாரும், பெருவாயின் முள்ளியாரும் எடுத்தோதினாராகலின்.

(91)

ஓதற்குப் பிரிந்தவன் செய்தற்காகாதன

92. ஓதற் ககன்றோன் ஒழிந்திடை மீண்டு
போதற் கியையவும் புலம்பவும் பெறாஅன்.

(இ - ம்.) ஓதற்குப் பிரிந்த தலைமகற்கு ஆகாததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஓதற்குப் பிரிந்த தலைமகன் அவ்வோதலையொழிந்து இடையிட்டு மீண்டு வருதற்குடம்படவும், அவ்விடத்துத் தலைமகளை நினைந்து புலம்பவும் பெறான் என்றவாறு.

(92)

தூதும், துணையும் காரணமாகச் சென்றாற்கொரு சிறப்பு விதி

93. தூதுந் துணைமையும் ஏது வாகச்
சென்றோன் அவ்வினை நின்றுநீட்டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே.

(இ - ம்.) தூதுந் துணைமையுங் காரணமாகப் பிரிந்த தலைமகற்கு எய்துவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தூது காரணமாகவும், உதவி காரணமாகவும் பிரிந்த தலைமகன் அத்தொழில்கள் பிரிவிற்குரியதோர் யாண்டின்கண் முடியாது நீட்டித்த காலத்துப் பாசறைக்கண்ணே யிருந்து தலைமகளை நினைந்து வெறுத்துப் புலம்புதல் பெறும் என்றவாறு.


1. தொல், பொருள், கற்பியல், சூ: 46.

2. ஆசாரக்கோவை, 42.