'மாமலைச் சென்னி' என்புழி ஆறாமுருபும், 'சென்னி யீண்டிய' என்புழி ஏழாமுருபுந் தொக்கன. 'போந்து', 'தீர்ந்து', 'அடக்கி' யென்னும் வினையெச்சங்கள் அடுக்காய் இருந்த என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தன; அப் பெயரெச்சம் இருந்தவன் என்னும் பெயர் கொண்டது. இயற்றமிழ் என்பது இருபெயரொட்டு. தமிழை என இரண்டாவது விரிக்க. 'பெரும்பொருள்' என்புழி உள்ளென்னும் ஏழாமுருபு தொக்கது. 'தழீஇ', 'நோக்கி', 'தொகுத்து', 'நிறீஇ', 'வகுத்து', 'புலப்படுத்து' என்னும் வினையெச்சங்கள் அடுக்காய் 'எழுதினன்' என்னும் முற்றுவினை கொண்டன. ஆங்கு என்பது அசை. 'வாழ்த்தப் பகர்ந்தோன்' என இயையும். இருந்து என்னும் வினையெச்சம் பகர்ந்தோன் என்னுந் தொழிற்பெயருட் 'பகர்தல்' என்னுந் தொழிலோடு முடிந்தது. பரப்பிய என்னும் பெயரெச்சம், நாற்கவிராசன் என்னுஞ் சிறப்புப் பெயர் கொண்டது. நாற்கவியாவன ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்பனவாம். 'பாற்கடற் பல்புகழ்' என்புழி உவமந் தொக்கது. நம்பி என்னும் இயற்பெயர் எய்தினன் என்னும் முற்றுவினைப்பயனிலை கொண்டது. ஆக்கியோன் பெயர் நம்பி; வழி தொல்காப்பியத்தின் வழி; அதன் வழியாயினும், தொல்காப்பியம் வழி நூலானமையின் இது சார்பு நூல் எனப்படும். எல்லையும் அதனானே அடங்கும், நூற்பெயர் அகப்பொருள் விளக்கம்; யாப்பு தொகுத்துயாத்தல்; நுதலிய பொருள் அகப்பொருள்; கேட்போர் கற்றுவல்லோர்; பயன் வீடுபேறு; காலம் பாண்டியன் குலசேகரன் காலம்; களம் அறிவோரவைக்களம். காரணம் கிளவிகளை யடைவுறக் கோத்தல், இவையெல்லாம் பாயிரத்தியல்பு எனக்கொள்க.
|