(இ - ம்.) இருவகைப் பாங்கரிற் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இளமை முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் பார்ப்பனப் பாங்கர்க் குரியனவாம் என்றவாறு. பிறவுமென்றதனால் வாயில் வேண்டல் முதலாயினவுங் கொள்க. (100) சூத்திரப்பாங்கர்க்கு உரிய செயல் 101. நன்மையின் நிறுத்தலுந் தீமையின்அகற்றலுஞ் சொன்னவை பிறவுஞ் சூத்திரர்க் குரிய. (இ - ம்.) சூத்திரப்பாங்கர்க்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நன்மையின் நிறுத்தல் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாஞ் சூத்திரப் பாங்கர்க்கு உரியனவாம் என்றவாறு. சொன்னவையும் பிறவும் என்றதனால் வாயில் வேண்டல் முதலாயினவுங் கொள்க. (101) பாகற்கு உரிய செயல் 102. சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும் வாயினேர் வித்தலும் வயங்குதுனி தீர்த்தலும் வினைமுடித் ததன்பின் வியன்பதி சேய்த்தென இனைவோற் றேற்றலும் பாகற் கியல்பே. (இ - ம்.) பாகற்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகளை வாயில்வேண்டல் முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் பாகற்கியல்பாம் என்றவாறு. (102) பாங்கிக்கு உரிய செயல் 103. பிரிவுழி விலக்கலும் பிரிவுடன் படுத்தலும் 1பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும் பிறவு முரிய இறைவளைப் பாங்கிக்கு. (இ - ம்.) பாங்கிக்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
1. பிரிந்துழித் தேற்றலு மிருந்துட னிரங்கலும் என்றும் பாடம்.
|