(இ - ள்.) பிரிவுழி விலக்கல் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பாங்கிக்கு உரியனவாம் என்றவாறு. 'பிறவும்' என்றதனால் வாயில்வேண்டல் முதலாயினவுங் கொள்க. (103) செவிலிக்கும் அறிவர்க்கும் உரிய செயல் 104. முன்வரு நீதியும் உலகியல் முறைமையும் பின்வரும் பெற்றியும் பிறவு மெல்லாந் தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும் உற்ற வறிவர்க்கும் உரியன வாகும். (இ - ம்.) செவிலிக்கும், அறிவர்க்கும் உரியனவெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) முன்வருநீதி முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாந் தெளியச் சொல்லுதல் செவிலித்தாய்க்கும், பொருந்திய அறிவர்க்கும் உரியனவாம் என்றவாறு. 'பிறவும்' என்றதனால் வாயில்வேண்டல் முதலாயினவுங் கொள்க. (104) காமக் கிழத்தியர்க்கு உரிய செயல் 105. குடிப்பிறந் தோரை வடுப்படுத் துரைத்தலும் மனைவியைப் பழித்தலும் 1வாடா ஊடலுட் டலைவற் கழறலும் மனைவிக் கமைந்த ஒழுக்கமும் காமக் கிழத்தியர்க் குரிய. (இ - ம்.) காமக்கிழத்தியர்க்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) குடிப்பிறந்தோரை வடுப்படுத்துரைத்தல் முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாங் காமக்கிழத்தியர்க்கு உரியனவாம் என்றவாறு. (105) பரத்தையர்க்கு உரிய செயல் 106. கிழவோன் தன்னையுங் கிழத்தி தன்னையும் இகழ்தலும் தம்மைப் புகழ்தலும் நிகழ்பொருள் 2காத்தலும் பரத்தையர் கடனென மொழிப.
1. வாடா வூடலுள் அனையவற் கழறலும் என்றும் பாடம். 2. கரத்தலும் என்றும் பாடம்.
|