(இ - ம்.) பரத்தையர்க்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகனையுந் தலைமகளையும் இகழ்தல் முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் பரத்தையர் முறைமை என்றவாறு. (106) பரத்தையர்க்கு உரிய சிறப்புவிதி 107. பரத்தையர் காதற் பரத்தையைப் புகழ்தலும் தம்மை இகழ்தலும் தம்முளுங் கூறுப. (இ - ம்.) பரத்தையர்க்கு உரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காதற் பரத்தையைப் புகழ்தலும், தங்களை யிகழ்தலும் தம்முளேயுங் கூறுவர் பரத்தையர் என்றவாறு. (107) இளையர் தலைமகற்கு இன்ன உரிமையர் என்பது 108. இளையர் கிழவோற் கிரவும் பகலும் களைத லில்லாக் கவசம் போல்வார். (இ - ம்.) இளையரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இளையராவார் தலைமகற்கு நீங்காக் கவசம் போலுந் தன்மையர் இரவும் பகலும் என்றவாறு. (108) இருவகைப் பாங்கர் உரிமை 109. இருவகைப் பாங்கரும் ஒருபெருங் குரிசிற் கின்னுயிர்த் துணையா இருபெருங் குரவரும் தன்னை யளித்த தகைமை யோரே. (இ - ம்.) பாங்கரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பார்ப்பனப் பாங்கரும் சூத்திரப் பாங்கரும் என்னும் இருவருந் தலைமகற்கினிய உயிர்த்துணையாக அவன் தாயுந் தந்தையும் அவனை அடைக்கலமாகக் கொடுக்கப்பட்ட தன்மையோர் என்றவாறு. (109) தோழி உரிமை 110. தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோ டுசாத்துணை யாகி அசாத்தணி வித்தற் குரிய காதல் மருவிய துணையே.
|