56

(இ - ம்.) தோழியது உரிமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தோழியென்பாள் செவிலிக்கு மகளாய் நன்மையும் தீமையும் ஆராய்தலுடனே தலைமகட்கு உசாத் துணையாய் அவளது வருத்தந் தீர்த்தற்குரிய அன்பு பொருந்திய துணையாம் என்றவாறு.

(110)

செவிலி உரிமை

111. செவிலி நற்றாய் தோழி யாகி
அவல நீக்கி அறிவுமா சாரமுங்
கொளுத்தித் தலைவியை வளர்த்த தாயே.

(இ - ம்.) செவிலியது உரிமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செவிலியென்பாள் தலைமகளுடைய நற்றாய்க்குத் தோழியாகி அத் தலைமகட்கு வருந் துக்கங் களைந்து நல்லறிவும் ஆசாரமுங் கொளுத்தித் தலைமகளை வளர்த்த தாயாம் என்றவாறு.

(111)

அறிவர் உரிமை

112. அறிவர் கிழவோன் கிழத்தியென் றிருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர்பெருங் குரவர்.

(இ - ம்.) அறிவரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அறிவரென்பார் தலைமகற்குந் தலைமகட்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள் என்றவாறு.

(112)

காமக்கிழத்தியர் இலக்கணம்

113. ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
வருகுலப் பரத்தையர் மகளி ராகிக்
காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர்.

(இ - ம்.) காமக்கிழத்தியரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காமக்கிழத்திய ரென்பார் சேரிப்பரத்தையர் போலப் பலர்க்கும் உரியரன்றி ஒருவற்கே உரிமை பூண்டுவருங்குலப் பரத்தையர் மகளிராய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டார் என்றவாறு.

(113)