காதற்பரத்தையர் இலக்கணம் 114. யாரையும் நயவா இயல்பிற் சிறந்த சேரிப் பரத்தையர் மகளி ராகிக் காதலிற் புணர்வோர் காதற் பரத்தையர். (இ - ம்.) காதற்பரத்தையரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காதற்பரத்தையர் என்போர் யாவரையும் விரும்பாத இயல்பினால் மிக்க சேரிப்பரத்தையருடைய மகளிராய்த் தம் அன்பினால் தலைமகனோடு கூடுவார் என்றவாறு. (114) காதற்பரத்தையர் உரிமை 115. அவருளும் வரைதற் குரியோ ருளரே. (இ - ம்.) காதற்பரத்தையர்க்கு உரியதொரு சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காதற்பரத்தையருள்ளும் உளர், தலைமகனால் வரைந்துகோடற்கு உரியர் என்றவாறு. (115) தலைமகனும் தலைமகளும் துறவறம் மேற்கொள்ளுங் காலம் 116. மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து மிக்க காம வேட்கை தீர்ந்துழித் தலைவனுந் தலைவியுந் தம்பதி நீங்கித் தொலைவில் சுற்றமொடு துறவறங் காப்ப. (இ - ம்.) தலைவனும், தலைவியும் துறவறங் காக்குங்காலம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மக்களொடு கூடி மகிழ்ந்து இல்லறத்தினைக் காத்துத் தமக்குப் பெருகிய காம வேட்கை யெல்லாந் தீர்ந்தகாலத்துத் தலைமகனும் தலைமகளும் தம்மூர் நீங்கி வனத்தின் கட்சென்று எல்லையில்லாச் சுற்றத்தொடு துறவறத்தினைக் காப்பர் என்றவாறு. (116) முதலாவது அகத்திணையியல் முற்றிற்று.
|