59

மறையோர் மன்ற லெட்டவை: அவற்றுட்
டுறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பிதன்
பொருண்மை யென்மனார் புலமை யோரே"

என்றாராகலின். அவற்றுட் பிரமமாவது, பிரமசாரியாய்த் தக்கானுமாய் இருப்பானுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீ முன்னர்க் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, தலைமகன் குரவர் வேண்டத் தலைமகள் குரவரும் மறாதே உடன்பட்டுத் தலைமகளை அலங்கரித்துத் தீ முன்னர்க் கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானுமிரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக்கொண்டு கன்னியை அலங்கரித்துத் தீ முன்னர்க் கொடுப்பது. தெய்வமாவது வேள்வியாசிரியனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீ முன்னர்க் கொடுப்பது. காந்தருவமாவது, கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைமகனும் தலைமகளும் தனியிடத்தெதிர்ப்பட்டுத் தாமே கூடுவது. ஆசுரமாவது, தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்வது. இராக்கதமாவது, தலைமகடன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது. பைசாசமாவது, துயின்றோள்மாட்டும் களித்தோள் மாட்டும் சென்று சேர்வது.

இவற்றுள், 1ஆசுர முதலாகிய மூன்றும் கைக்கிளைக்கு உரியவாம். தெய்வமீறாகிய நான்கும் பெருந்திணைக்கு உரியவாம்.

என்னை?

2"முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
பின்னைய நான்கும் பெருந்திணை பெறுமே"

என்றாராகலின்.

(1)


1. ஆசுரம் முதல் மூன்றாவன: முற்கூறியவற்றுள் ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

தெய்வம் ஈறாகிய நான்காவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்பன, (காந்தர்வம் அன்பின் ஐந்திணைக்கு உரியது.)

இவற்றுள், பிரமம் அறநிலை எனவும், பிரசாபத்தியம் ஒப்பு எனவும், ஆரிடம் பொருள்கோள் எனவும், காந்தர்வம் யாழோர் கூட்டம் எனவும், ஆசுரம் அரும்பொருள் வினைநிலை எனவும், பைசாசம் பேய்நிலை எனவுங் கூறப்படும். இறையனார் அகப்பொருள் 1ஆம் சூ. உரை. பவாநந்தர் கழகப்பதிப்பு, பக்கம் 29.

2. தொல், பொருள், களவியல் சூ: 14.