1. அகத்திணை இயல் அகப்பொருளின் வகை 1. மலர்தலை யுலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை யெனவெழு பெற்றித் தாகும். என்பது சூத்திரம். மேற் பாயிரத்திலக்கணம் உணர்த்திப் போந்தாம். இனி, நூலிலக்கணம் உரைக்கின்றாம். அஃதுரைக்குங்கால் நூல் நுதலியது உரைத்தலும், நூலுள் அதிகாரம் நுதலியது உரைத்தலும், அதிகாரத்துள் ஓத்து நுதலியது உரைத்தலும், ஓத்தினுட் சூத்திரம் நுதலியது உரைத்தலும் என நான்கு வகையால் உரைத்தல் வேண்டும். அவற்றுள் நூல் நுதலியது உரைக்குங்கால் நூலாமாறும்; நூலென்ற சொற்குப் பொருளாமாறும் உரைத்தல் வேண்டும். அவற்றுள் நூலாமா றுரைக்குங்கால் நூல் மூன்று வகைப்படும். முதனூலும் வழி நூலும் சார்பு நூலும் என. என்னை? 1"முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்" என்றாராகலின். அவற்றுள், முதனூலாவது வரம்பில் அறிவன் பயந்ததாகும். என்னை? 2"வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்" என்றாராகலின். வழிநூலாவது முதனூலின்வழி தப்பாமற் பின்னரும் வேண்டும் விகற்பங் காட்டி வழுவாமற் சொல்வது.
|