60

கைக்கிளையின் பாகுபாடு

118. காட்சி ஐயந் துணிவுகுறிப் பறிவென
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை.

(இ - ம்.) மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள்ளும் முதலாகிய கைக்கிளைத்திணையின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கைக்கிளையாவது, காட்சிமுதலாகக் குறிப்பறிதல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கு வகையினை உடைத்தாம் என்றவாறு.

(2)

காட்சி

119. புணர்ப்பதும் பிரிப்பது மாகிய பால்களுட்
புணர்க்கும் 1பாலிற் பொருவிறந் தொத்த
கறைவேற் காளையுங் கன்னியுங் காண்ப
இறையோன் உயரினுங் குறைவின் றென்மனார்.

(இ - ம்.) நிறுத்த முறையானே காட்சிக்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முற்பிறப்பினுங் காமநுகர்ந்தார் இருவரையும் மறுபிறப்பினுங் கூட்டுவதும் பிரிப்பதுமாகிய நல்வினை தீவினை என்னும் இரண்டனுள் நல்வினை வயத்தால் தனியிடத்து எதிர்ப்படுவர், குலத்தானுஞ் செல்வத்தானும் அறிவானும் பிறவாற்றானுந் தம்மோடு ஒத்தாரு மிக்காரும் இன்றித் தம்மிற்றாமே ஒத்த தலைமகனும் தலைமகளும், அவருள் தலைமகன் உயர்ந்தனனாயினுங் குற்றமின்றென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

எனவே, தலைமகள் உயர்தல் குற்றமென்பதாம். என்னை?

2"ஒன்றே வேறே யென்றிரு பால்வயி
னொன்றி யுயர்ந்த பால தாணையி
னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே"

என்றாராகலின். ஈண்டுக் காளை என்றது பருவங்குறித்து வந்ததோர் ஆகுபெயர் எனக்கொள்க. 3அதற்குச் செய்யுள்:


1. (பாடம்) 'பாலுள்'

2. தொல், பொருள், களவியல், சூ: 2.

3. காட்சிக்கு.