1"மண்ணிற் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலயவெற்பிற் பெண்ணிற் சிறந்தவிப் பேதைதன் பார்வை பெருவினையேன் எண்ணிற் சிறந்த விருந்துயர் நோய்தனக் கின்மருந்தாய்க் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" எனவும், 2"இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" எனவும் வரும். (6) களவிற்கு உரிய கிளவித் தொகை 123. இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல் இடந்தலைப் பாடு பாங்கற் கூட்டம் பாங்கிமதி யுடம்பாடு பாங்கியிற் கூட்டம் பாங்கமை பகற்குறி பகற்குறி யிடையீ டிரவுக் குறியே இரவுக்குறி யிடையீடு வரைவு வேட்கை வரைவு கடாதல் ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலென் றொருபதி னேழுங் களவிற் குரிய கிளவித் தொகையே. (இ - ம்.) களவிற்கு உரிய கிளவித் தொகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இயற்கைப் புணர்ச்சி முதலாக வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினேழுங் களவென்னுங் கைகோளிற்கு உரிய கிளவியின் றொகையாம் என்றவாறு. (7)
1. த. கோ. செ: 4. 2. திருக்குறள் செ: 1091.
|