1. இயற்கைப் புணர்ச்சி இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணம் 124. 1தெய்வம் புணர்ப்பச் சிந்தைவே றாகி எய்துங் கிழத்தியை யிறையோ னென்ப. (இ - ம்.) இயற்கைப் புணர்ச்சியது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தெய்வங் கூட்டத் தன்மனம் வேறாய்த் தலைமகளைக் கூடுந் தலைமகன் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (8) தெய்வத்தின் எய்தும் புணர்ச்சியின் விரி 125. கலந்துழி மகிழ்தலும் நலம்பா ராட்டலும் ஏற்புற வணிதலும் என்னுமிம் மூன்றும் போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே. (இ - ம்.) இயற்கைப் புணர்ச்சியின் பாகுபாடாகிய இரண்டனுள், முன்னையதாகிய தெய்வப் புணர்ச்சியின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கலந்துழி மகிழ்தலும் நலம்பாராட்டலும் ஏற்புற வணிதலும் என்னும் இம் மூன்று கிளவியும் அகத்திணையியலுட் போற்றப்பட்ட தெய்வப் புணர்ச்சியின் விரியாம் என்றவாறு. (9) தலைவியின் எய்தும் புணர்ச்சியின் வகை 126. வேட்கை யுணர்த்தல் மறுத்தல் உடன்படல் கூட்டமென் றிறைவியிற் கூட்டநால் வகைத்தே. (இ - ம்.) தலைமகளாற் புணரும் புணர்ச்சியின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வேட்கையுணர்த்தல் முதலாகக் கூட்டம் ஈறாகச் சொல்லப்பட்ட நான்குவகையினை உடைத்து, தலைமகளாற் புணரும் புணர்ச்சி என்றவாறு. (10)
1. இஃது இயற்கைப் புணர்ச்சி இரண்டினுக்கும் பொதுவிதி. இதனைத் தெய்வத்தின் எய்தும் புணர்ச்சியினது இலக்கணம் என்னலாகாதோ? எனின், 'இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி, முயற்சியின்றி முடிவதாகும்', என்னும் 33ஆம் சூத்திரத்தில் தெய்வத்தின் எய்தும் புணர்ச்சிக்கு இலக்கணங் கூறப்பெற்றிருத்தலின் இதனை அதன் இலக்கணம் என்னலாகாது என்க.
|