என்னை? 1"முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும்" என்றாராகலின். சார்பு நூலாவது அவ்விருவர் நூலின் முடிந்த பொருளை ஓருபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட வைப்பது. என்னை? 2"இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும்" என்றாராகலின். நூல் என்ற சொற்குப் பொருளுரைக்குங்கால் தந்திரம் என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க. நூல் நுதலியது உரைத்தலாவது; இந்நூல் இன்னது கருதிற்று என்று உரைத்தல். அது தமிழ் நுதலிற்று என்றல், அந்நூல் மூன்று வகைப்படும், இயனூலும், இசை நூலும், நாடக நூலும் என. அவற்றுள், இயனூல் மூன்று வகைப்படும், எழுத்தும், சொல்லும், பொருளும் என. என்னை? 3"தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி" என்றாராகலின். அஃதேல், யாப்பும் அலங்காரமும் அவற்றுள் யாதனுள் அடங்குமோ வெனின், அவை இரண்டும் பொருளினுள் அடங்கும் எனக் கொள்க. அதிகார நுதலியது உரைத்தலாவது, இவ்வதிகாரம் இன்னது கருதிற்று என்றல். ஆயின், இவ்வதிகாரம் என்னுதலிற்றோவெனின், அது பாயிரவுரையுள் உரைத்துப்
1, 2 இச் சூத்திரங்கள் இறையனா ரகப்பொருள் முதற் சூத்திர உரையினும் யாப்பருங்கலவிருத்தி முதற்சூத்திர உரையினும் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் இக் குறியிட்ட சூத்திரம் தொல், பொருள், மரபியலின் 94-ஆம் சூத்திரமாகும். இவற்றைப் பவணந்திமுனிவர், ஆசிரியவசனமாக நன்னூல் பொதுப்பாயிரத்தில் அமைத்துக்கொண்டனர். 3. தொல். பாயிரம்.
|