8

போந்தாம். இவ்வதிகாரம் அகத்திணையியலும், களவியலும், வரைவியலும், கற்பியலும், ஒழிபியலும் என ஐந்தோத்துக் கொண்டதாம். அதிகாரத்துள் ஓத்து நுதலியது உரைத்தலாவது இவ்வதிகாரத்துள் இவ்வோத்து இன்னது கருதிற்று என்றல். ஆயின், இவ்வதிகாரத்துள் இவ்வோத்து என்னுதலிற்றோ வெனின், அகத்திணை இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்றெனக் கொள்க. ஓத்தினுட் சூத்திரம் நுதலியது உரைத்தலாவது, இவ்வோத்தினுள் இச் சூத்திரம் இன்னது கருதிற்று என்றல்.

ஆயின், இவ்வோத்தினுள் இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அகப்பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. அன்னதாதல் இச் சூத்திரப்பொருளுரைப்பவே விளங்கும்.

அப்பொருளுரை நான்கு வகைப்படும்: கருத்துரைத்தலும், கண்ணழித் துரைத்தலும், பொழிப்புத் திரட்டலும், அகலங் கூறலும் என.

என்னை?

1"கருத்துரை கண்ணழிபு பொழிப்புத் திரட்ட
லகலங் கூற லெனநால் வகைத்தே
புகலுஞ் சூத்திரப் பொருளுரை யென்ப"

என்றாராகலின்.

அவற்றுள் கருத்துரைத்தலாவது, சூத்திரத்து உட்கோள் உரைத்தல்.

என்னை?

"சூத்திரத் துட்கோள் சொல்லல் கருத்துரை"

என்றாராகலின்.

கண்ணழித்தலாவது, சூத்திரத்துச் சொற்றொறும் சொற்றொறும் பொருளுரைத்தல்.

என்னை?

"சொற்றொறுஞ் சொற்றொறுந் துணிபொரு ளுரைத்தல்
கற்றறி புலவர் கண்ணழி பென்ப"

என்றாராகலின்.


1. இது யாப்பருங்கலக்காரிகை முதற்சூத்திர உரையிற் காட்டப்பட்டிருக்கின்றது.