6. இடந்தலைப்பாடு
இடந்தலைப்பாட்டின் வகை 134. தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென் றிவ்வோர் மூவகைத் திடந்தலைப் பாடே. (இ - ம்.) இடந்தலைப்பாட்டின் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இடந்தலைப்பாடென்பது, தெய்வந் தெளிதலும் கூடலும், விடுத்தலும் என மூன்றுவகையினை உடைத்து என்றவாறு. ஓர்:அசை. இக் கிளவி 1"பெற்றவழி மகிழ்ச்சி" என்பதனாற் கொள்ளப்பட்டது. (18) இடந்தலைப்பாட்டின் இலக்கண விரி 135. தந்த தெய்வந் தருமெனச் சேறலும் முந்துறக் காண்டலும் முயங்கலும் புகழ்தலும் உடன்புண ராயத் துய்த்தலும் எனவைந் திடந்தலைப் பாட்டி னிலக்கண விரியே. (இ - ம்.) இடந்தலைப்பாட்டின் இலக்கண விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தந்த தெய்வந் தருமெனச் சேறல் முதலாக உடன்புணராயத் துய்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் இடந்தலைப்பாட்டின் இலக்கணவிரியாம் என்றவாறு. தந்ததெய்வந் தருமெனச் சேறற்குச் செய்யுள்: 2"மன்றும் பொதியினு மாமயில் சேர்தஞ்சை வாணன்வெற்பில் துன்றும் புயலிளஞ் சோலையின் வாய்ச்சுற வுக்குழையைச் சென்றுந்து சேல்விழி மின்னைமுன் னாட்டந்த தெய்வநமக் கின்னுந் தருநெஞ்ச மேயெழு வாழியிங் கென்னுடனே" என வரும்.
1. தொல், பொருள். களவியல். சூ: 11. 2. த. கோ. செ: 34.
|