7. பாங்கற் கூட்டம் பாங்கற்கூட்டத்தின் வகை 136. சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென் றாங்கெழு வகைத்தே பாங்கற் கூட்டம். (இ - ம்.) பாங்கற்கூட்டத்தின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) சார்தல் முதலாகப் பாங்கிற்கூட்டல் ஈறாக எழு வகையினை உடைத்தாம் பாங்கற் கூட்டம் என்றவாறு. ஆங்கு : அசை. (20) பாங்கற்கூட்டத்தின் விரி 137. தலைவன் பாங்கனைச் சார்தலும் பாங்கன் றலைவனை யுற்றது வினாதலும் தலைவன் உற்ற துரைத்தலும் கற்றறி பாங்கன் கழறலும் கிழவோன் கழற்றெதிர் மறுத்தலும் கிழவோற் பழித்தலும் கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றலும் பாங்கன் தன்மனத் தழுங்கலும் தலைவனோ டழுங்கலும் எவ்விடத் தெவ்வியற் றென்றலும் அவனஃ திவ்விடத் திவ்வியற் றென்றலும் பாங்கன் இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும் இறைவியைக் காண்டலும் இகழ்ந்ததற் கிரங்கலும் தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும் தலைவன் றனக்குத் தலைவிநிலை கூறலுங் தலைவன் சேறலும் தலைவியைக் காண்டலும் கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் பாங்கிற் கூட்டலும் என்றீங் கீட்டுநா லாறுங் காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே
|