(இ - ம்.) பாங்கற்கூட்டத்து விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைவன் பாங்கனைச் சார்தல் முதலாகப் பாங்கிற் கூட்டல் ஈறாக இவ்விடத்துத் தொகுத்த இருபத்துநான்கும் மேற்காட்டிய பாங்கற்கூட்டத்து விரியாம் என்றவாறு. அவற்றுள், தலைவன் பாங்கனைச் சார்தற்குச் செய்யுள்: 1"புனையாழி யங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ் மனையா கியதஞ்சை வாணனொன் னாரென மற்றிங்ஙனே இனையா தெழுமதி நன்னெஞ்ச மேநமக் கின்னுயிரே அனையா னருட்புன லாலனங் கானல மாற்றுதற்கே" என வரும். பாங்கன் தலைவனை உற்றது வினாதற்குச் செய்யுள் : 2"வலம்புரி போற்கொடை வாணன்றென் மாறை மழைவளர்பூஞ் சிலம்புறை சூர்வந்து தீண்டின போலொளி தேம்பியிவ்வா றுலம்புனை தோளுநின் னுள்ளமும் வாடி யுருகிநின்று புலம்புவ தென்னைகொல் லோசொல்ல வேண்டும் புரவலனே" என வரும். தலைவன் உற்றது உரைத்தற்குச் செய்யுள் : 3"மலைமுழு துங்கொற்றம் வைக்கின்ற வாணன்றென் மாறை நண்பா சிலைமுழு துஞ்சுற்று முற்றுமெய் யாநிற்பச் செந்நிறத்தே கொலைமுழு துங்கற்ற கூரிய வாளி குளிப்பவின்றென் கலைமுழு தும்பட்ட தாலொரு மான்முடிக் கண்ணியிலே" எனவும், 4"எலுவ சிறாஅ ரேமுறு நண்ப புலவர் தோழ கேளா யத்தை மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறு நுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே" எனவும் வரும்.
1. த. கோ. செ : 39. 2. த. கோ. செ : 40. 3. த. கோ. செ : 41. 4. குறு. : 129.
|