பாங்கன் எவ்விடத் தெவ்வியற் றென்றற்குச் செய்யுள்: 1"முகத்திற் பகழி யிரண்டுடை யார்க்கிட மூரிமுந்நீர்  அகத்திற் பிறந்த வரவிந்த மோவடை யார்தமக்கு  மகத்திற் சனியன்ன சந்திர வாணன்றென் மாறைவெற்பா  நுகத்திற் பகலனை யாய்தன்மை யேது நுவலெனக்கே" என வரும். தலைவன் இவ்விடத்திவ்வியற்று என்றற்குச் செய்யுள்: 2"கனமே குழல்செங் கயலே விழிமொழி கார்க்குயிலே  தனமே முகையென் தனிநெஞ்ச மேயிடை தன்பகைக்கு  வளமே யருளிய வாணன்றென் மாறை மணிவரைசூழ்  புனமே யிடமிங்ங னேயென்னை வாட்டிய பூங்கொடிக்கே" எனவும், 3"கடற்கோடு செறித்த வளைவார் முன்கைக்  கழிப்பூத் தொடர்ந்த விரும்பல் கூந்தற்  கானன் ஞாழற் கவின்பெரு தழையள்  வரையர மகளிரி னரியளென்  நிறையரு நெஞ்சங் கொண்டொளித் தோளே" எனவும் வரும். பாங்கன் இறைவனைத் தேற்றற்குச் செய்யுள்: 4''மழைவளர் மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பின்  இழைவளர் வார்முலை யேரிளந் தோகையை யிக்கணம்போய்க்   கழைவளர் சாரலிற் கண்டுனை யான்வந்து காண்பளவுந்  தழைவளர் தாரண்ண லேதணி வாய்நின் றகவின்மையே'' என வரும்.  பாங்கன் குறிவழிச் சேறற்குச் செய்யுள்: 5"பாரித்த திண்மையெம் மண்ணலுண் ணீரைப் பருகிநின்று  பூரித்த செவ்விள நீர்களுந் தாங்கியப் பூங்கொடிதான்  வாரித் தலம்புகழ் வாணன்றென் மாறை வரைப்புனஞ்சூழ்  வேரித் தடம்பொழில் வாய்விளை யாடுங்கொன் மேவிநின்றே" என வரும். 
 1. த. கோ. செ: 48.  2. த. கோ. செ: 49.  3. ஐங்குறு. செ: 191.  4. த. கோ. செ: 50.  5. த. கோ. செ: 51. 
 |