பொழிப்புத் திரட்டலாவது, சூத்திரத்துப் பொருளை யெல்லாம் தொகுத்துரைத்தல். என்னை? 1"பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப் பதுவே" என்றாராகலின். அகலங் கூறலாவது, சூத்திரப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவும் விடையும் உள்ளுரைத்து விரித்துரைத்தல். என்னை? "அகலமென்ப தாசறக் கிளப்பின் விகல மின்றி விரித்துரைப் பதுவே" என்றாராகலின். அவற்றுள் கருத்துரை முற்கூறப்பட்டது. இனிக் கண்ணழிக்குமாறு: மலர்தலை உலகத்து என்பது, பரந்த இடத்தையுடைய தமிழ் நாட்டகத்து என்றவாறு. புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் என்பது, தலைச்சங்கத்தோரும் இடைச் சங்கத்தோரும், கடைச்சங்கத்தோருமாகிய சான்றோரால் ஆராயப்பட்ட அரிய தமிழ் நூலகத்து அகப்பொருள் என்றவாறு. 'கைக்கிளை யைந்திணை பெருந்திணை எனவெழு பெற்றித் தாகும்' என்பது. கைக்கிளையும் ஐந்திணையும் பெருந்திணையும் என ஏழியல்பினை உடைத்து என்றவாறு. என்னை? 2"கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப" என்றாராகலின். பொழிப்புத் திரட்டலாமாறு:பரந்த இடத்தையுடைத்தாகிய தமிழ்நாட்டிடத்து மூன்று வகைப்பட்ட சங்கத்தோரான் ஆராயப்பட்ட அரிய தமிழ் நூலகத்து அகப்பொருளாவது கைக்கிளையும், ஐந்திணையும், பெருந்திணையும் என ஏழியல்பினை உடைத்தாம் என்றவாறு.
1. இது யாப்பருங்கலக்காரிகை முதற்சூத்திர உரையிற் காட்டப்பட்டிருக்கின்றது. 2. தொல். பொருள். அகத்திணையியல், சூத்திரம்: 1.
|