முதலாயினவும், ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக அவற்றின் மரபு கூறுவனவும், ‘நூலே கரகம்’ முதலாக நாற்பாலார் மரபு கூறுவனவும் பிறவுமாம். |
இனித், தொல்காப்பியன் என்னும் பெயர் குடிப்பெயர் என்றும் குலமுன்னோனின் பெயர் என்றும், ஊரினடியாகப் பிறந்த பெயர் என்றும், இயற்பெயரென்றும், பெற்றோர் ஒருகாரணம் கருதியிட்ட பெயர் என்றும், இந்நூலான் வந்த பெயர் என்றும் கூறி ஆய்வாளரும் உரையாளரும் ஒருவரை ஒருவர் ஒட்டியும் வெட்டியும் விளக்கந்தந்துள்ளனர். காப்பியன் என்னும் பெயர் இவர் காலத்திற் சிலருக்கிருந்தமையின் இவர் அவர்களின் முற்பட்டவர் என உணரத் ‘‘தொல்” என்னும் அடை கொடுத்து வழங்கினர் என்றும் கூறியுள்ளனர். ஆசிரியர் இந்நூற்கிட்ட பெயர் மறைந்து ஆசிரியர் பெயராலேயே பின்னர் வழங்கலாயிற்றெனக் கூறினாரும் உண்டு. |
இந்நூலியற்றிய பின்னரே இவ்வாசிரியர்க்கு இப்பெயராயிற்று என்பது நன்கு விளங்குமுகத்தான் இந்நூல் அரங்கேறிய காலத்து உடனிருந்து யாவற்றையும் உணர்ந்த பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த ‘‘தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி’’ என உரைத்தார். |
‘‘தன்பெயர் தோற்றி’’ என்பதற்கு நூற்பெயரைத் தோற்றுவித் தென்பார் வெள்ளைவாரணனார்; அவ்வாறாயின், ‘‘அதன்’’ பெயர் தோற்றி என விளங்கக் கூறியிருப்பார் பனம்பாரனார். இதனை ஒருவாறு கருதிய நச்சினார்க்கினியர் இவருடைய இயற்பெயர் திரணதூமாக்கினி என்று கூறினார்; எனினும் ‘‘பழைய காப்பியக் குடியினுள்ளோன்’’ என்றே உரை கூறினார். தொல்காப்பியம் என்பதற்குத் தொன்மையான காவியம் எனப்பலர் கருத்துக் கொண்டனர். இலக்கண நூலைக் காவியம் என்றல் வடமொழியினும் மரபு இல்லை. எனவே அது பொருந்துதற்கில்லை. |
இக்குழப்பங்களுக்கெல்லாம் ஆரியர்கள் பிரமன் வழி ஒன்றும் சுக்கிரன் வழியொன்றுமாக இரு காவ்ய கோத்திரங்கள் வழங்குவதும், கடைச் சங்க நூல்களுள் சில புலவர்தம் பெயர் காப்பியன் எனக் காணப்பெறுவதும், காப்பியாறு என்பதோரூர் காணப்பெறுவதும், இடைக்காலக் கல்வெட்டுக்களில் சிலருக்கு இப்பெயர் காணப்பெறுவதுமேயாம். இக்கோத்திரத்துத் |