தமிழகத்தில் வழங்கும் காப்பியன் என்னும் பெயர்க்கும் வடமொழியில் வழங்கும் காவியம் என்னும் பெயர்க்கும் உறவு உள்ளதாகக் கொண்ட மயக்கம் இத்திரிபுக்குக் காரணம். காப்பு என்பது காவல் என்னும் பொருளுடைய தொழிற்பெயராதலின் நாடு காக்கும் காவலனுக்குத் துணையாக அவனைக் காக்கும் உரிமை பூண்டொழுகிய மாவீரர்களுக்குக் காப்பாளர் என்னும் பெயர் வழங்குதல் மரபு. காப்பான், காப்பவன் என நின்ற வினையாலணையும் பெயர்கள் பெயர்த் தன்மையடையும்போது காப்பியன் என வருதல் சொல்லாக்க மரபிற்கு ஒத்ததே. அம்முறையில் வந்தனவே காப்பியக்குடி, காப்பியர், காப்பியார், காப்பியாரூர் என்பனவாகும். காப்பியாரூர் என்பதன் பொருள் புலப்படாத நிலையில் அது காப்பியாற்றூர் என்று திரிந்து காப்பியாறு என வழங்கியிருத்தல் வேண்டும். காப்பாகச் செல்லும் ஆறு காப்பியாறு என வந்ததாகவும் கொள்ளலாம். |
இனி வடமொழியிற் கூறும் காவியம் என்பது தமிழில் காப்பியம் எனத் தற்பவமாய் வழங்குவதாகக் கோடல், கவி என்னும் சொல்லை வட மொழிக்கே உரியதாகக் கருதினமையால் வந்த இடர்ப்பாடாகும். கவி செந்தமிழ்ச் சொல் என்பதையும், இதன் வேர்ப்பொருள் வேறு, வடமொழிக் கவியின் வேர்ப்பொருள் வேறு என்பதையும் உணர்தல் வேண்டும். நீர் என்பதுகூட நீரம் என்னும் வடசொல் வழியாக வந்ததெனக் கூறுதல் வடமொழிப் பற்றாளர் இயல்பாதலின், கவியை வடசொல் என அவர் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. இனித் தொல்காப்பியர் காலம் இடைச்சங்க காலம் எனக் கொள்ளுவோர் பிற்காலக் ‘‘காப்பியர்’’ வழக்குகளைக் கண்டு மயங்கவேண்டுவதில்லை. அவர் காலம் கி. பி. எனக் கருதுவோருக்கோ அமைதிகூற வேண்டுவதில்லை என விடுக்க. |