காலஞ்சென்ற யாழ்ப்பாணத்து நவாலியூர் ந. சி. கந்தையாப் பிள்ளையும், பேராசிரியர் சி. இலக்குவனாரும் இக்கருத்திற்கியைவர். மூதறிஞர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் நூலாசிரியன் பெயரே நூற்பெயராக வழங்குகிறது என்னும் கருத்தினராய் நூற்பெயர் தொல்காப்பியன் என்றே இருத்தல் வேண்டுமென்பார். இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை முதலானோர் தத்தம் விருப்பிற்கேற்பப் பலவாறாக உரை பகர்ந்தனர். இவர்தம் கூற்றுக்களுள் பொருந்தாதனவற்றைத் தக்க மேற்கோள் காட்டிப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் மறுத்துள்ளமையை அவர் ஆய்வுரையுட் கண்டுகொள்க. |
பல்புகழ்: பலவாய புகழ். பண்புத்தொகை. அவையாவன: முற்கூறப்பெற்றனவும், தவமுதலாய ஞானயோக ஒழுக்கங்களுமாம். இனி, இது பல்கிய புகழ், பல்கும் புகழ் என வினைத்தொகையாக்கியும் நயங்கான நின்றது. புகழை நிறுத்த என முடியும். நிறுத்த - கலங்காமல் நிலைபெறச் செய்த என்றவாறு. கலக்கமாவது பின் ஆய்வாளர்கள் கலக்கிய கலக்கங்கள் கண்டாமன்றே அவை போல்வன. மாயாமல் நிறுத்திய - நிலைபெறுத்தின என்பார் முன் உரையாளர். |