எனக் கூறும் ‘ஆயிடை’ எனச் சொற்சீரடியும் தமிழ்கூறும் நல்லுலகத் தென இருசீரடியும் பெற்றுப் பாஅ வண்ணத்தால் நடந்து, நோக்கும் பாவுறுப்பும் உடையதாய் வஞ்சித் தூக்கும் செந்தூக்கும் கொண்டு, மரபியல் வழா யாப்பமைதியோடு, அம்மையும் அழகுமாகிய வனப்புக்களோடு நிறைந்து திகழ்கின்றதென்க. |
இனி இப்பாயிரத்துள் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்றதனான், ஆக்கியோன்பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன. ஐந்திரம் நிறைந்த என்றதனான், நூலாசிரியன் அறிவும் ஆற்றலும்; பல்புகழ் நிறுத்த படிமையோன் என்றதனான் தகுதியும் சால்பும் பெறப்பட்டன. செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு என்றதனான் வழியும், புலந்தொகுத்தோனே என்றதனான் வழியினது வகையும், வடவேங்கடந் தென்குமரி என்றதனான் நில எல்லையும், முறைப்பட எண்ணி என்றதனானும், மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்றதனானும் யாப்பும், காரணமும், பயனும்; வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்றதனான் நுதலிய பொருளும், அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து என்றதனான் கேட்டோரும் அவைக்களமும்; நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து என்றதனான் காலமும் பெறப்பட்டன. |