இந்நூலின்பாயிர ஆசிரியர் ‘‘எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’’ எனக்கூறுதலான், ஆசிரியர் அம்முறைமையான் ஆராய்ந்தமை பெறப்படும். |
ஒருபொருளை ஆக்கிக்கொள்ளக் கருவியும் செய்கையும் அடிப்படையாதலின், அம்முறையானே, சொற்களை ஆக்குதற்குரிய எழுத்துக்களைப்பற்றிய இலக்கணமும், கருவியும் செய்கையுமாக அமைந்துள்ளது. |
இவ்வதிகாரத்துள்ள ஒன்பதுஇயல்களுள் நூன்மரபும், மொழிமரபும், பிறப்பியலும், புணரியலும், பின்வரும் தொகைமரபு முதலாய செய்கையியல் ஐந்தற்கும் கருவியாம். பிறப்பியல், நூன்மரபு மொழிமரபுகட்குக் கருவியாம். மற்று ஒவ்வோரியலுள்ளும் சில சூத்திரங்கள் கருவியாயும் செய்கையாயும் அமைந்துள்ளன. |
நூன்மரபு:இசைப்பதும் ஒலிப்பதுமாகிய ஒலி எழுத்துக்களின் மரபுகளை உணர்த்தும் பகுதி என்பது இதன் பொருள். இஃது ஆறாவதன் தொகைமொழி. இத்தொகை, அன்மொழித் தொகையாய், எழுத்தொலிகளைப் பற்றிய இலக்கணங் கூறும் இயலை உணர்த்தி நின்றது. நூல் என்பது நுவல் என்னும் குறைவினையின் நீட்சியாய் ஆக்கம்பெற்றசொல். நூவல்-நூல். ஒல் என்னும் குறைச்சொற்கிளவிகளான் ஆக்கம்பெற்றது. இதன் பொருள் ‘நாவால் ஒலிக்கப்பெறுவது’ என்பதாகும். நாவால் உந்தப்பெறும் ஒலிஎன்பது கருத்து. வழக்கின்கண் இச்சொல் ‘சினையிற்கூறும் முதலறிகிளவி’ என்னும் ஆகுபெயரிலக்கணத்தான், [புத்தகமாகிய] நூலினை உணர்த்தலாயிற்று. இதன் இயற்பொருள் ‘ஒலியெழுத்து’ என்பதாகும். |
மரபு என்பது (மருவு) மருவுதல் என்னும் தொழிற்பெயரின் அடியாகப் பிறந்த குறியீட்டுச்சொல்லாகும். தொன்றுதொட்டு நியதியாக வருதல் - என்பது இதன்பொருள். |
அஃது ஈண்டுத் தமிழ்நெறியுணர்ந்த சான்றோரான் தொன்று தொட்டு வழங்கப்பெற்றுவரும் இலக்கணநெறியை உணர்த்தி நின்றது. எனவே, இவ்வியலுள் கூறப்பெறும் எழுத்தொலி மரபுகள் தமிழ்மொழிக்கே உரியவை என்பது புலனாகும். |
இவ்வியலுள் ஆசிரியர் தமிழ்மொழிக்கென வரைந்துகொள்ளப் பெற்ற எழுத்துக்களின் தொகையும் வகையும் விரியும், அவற்றின் பெயரும் முறையும் இசையளவும் ஒலியளவும், அவற்றின் |