நீட்சியும் குறுக்கமும் திரிபாகும் மயக்கமும் வரிவடிவுசெய்து கோடற்குரிய குறிப்பும் இசையிடத்து எய்தும் நிலையும்பற்றி, ஆடிநிழலின், அறியக்கூறுகின்றார். | நூல் | சூத்திரம் 1: | எழுத்தெனப் படு(ப)வ | | அகரமுதல் னகரஇறுவாய் | | முப்பஃ தென்ப | | சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே | (1) | கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது. | பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச் சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல், அகரமாகிய எழுத்து முதலாக னகரமாகிய எழுத்து ஈறாக உள்ள முப்பஃது என்று கூறுவர் ஆசிரியர். | அகரனகரங்கள் அகப்பாட்டெல்லையாக நின்றன. ‘படுவ’ என்னும் பாடமே இந்நூல் நெறிக்கு ஒத்தது. சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றும் உட்பட, எழுத்து முப்பத்துமூன்றாம் என்றவாறு. இதனை ‘‘மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்’’ (புணர்-1) என்பதனானும் அறிக. | எடுத்துக்காட்டு:(இக்கால வரிவடிவம்) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள. இவை உயிரெழுத்துக்கள். க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன. இவை அகரச்சாரியையொடு நிற்கும் மெய்யெழுத்துக்கள். இவற்றை இக்கு, இங்கு, இச்சு என உயிர்ப்பிசையாற் புள்ளியாக்கிக் கண்டுகொள்க. க், ங்,...........ன் எனக்காட்டுதல் அநுகரண ஓசையை உட்படுத்திக் காட்டுதலாகும். இவற்றின் உருவும் வடிவும் பிறப்பியலுட் கூறப்படும். | இச்சூத்திரத்தான் தமிழ் எழுத்துக்கள் முப்பத்துமூன்று என்னும் தொகையும், தனித்துவரல் மரபின, சார்ந்து வரல் மரபின என்னும் வகையும், முதல் இறுவாய் என்றதனான் முறையும், எழுத்து என்றதனான் (தொகுதிப்) பெயரும் பெறப்பட்டன. |
|
|