76நூன்மரபு

பொருள்:மேற்கூறிய  முப்பத்து  மூன்றனுள்  அ இ உ எ ஒ  என்னும்
அக்கூற்று  எழுத்து  ஐந்தும்  ஒவ்வொன்றும்  ஒரு  மாத்திரையளவினதாய்
இசைக்கும். அதனான் அவற்றைக் குற்றெழுத்து எனப் பெயரிட்டுக்  கூறுவர் ஆசிரியர்.   அளபென்றது   ஈண்டுச்   செவிப்புலனாகும்     ஓசையினது
மாத்திரையை. அதனான் குற்றெழுத்தென்பது  மாத்திரையளவையான்  வந்த
காரணக்குறியீடு என்பது புலப்படுத்தப் பெற்றது. ‘அப்பால்’  என்றது  ஐந்து கூறுபட்ட  என்றவாறு.   இசைக்கும்   என்றது   அவற்றின்   இலக்கணத் தன்மையையாகும்.       உயிர்எழுத்துக்கட்கு         இசையளவொன்றே சிறப்பிலக்கணமாகலின்     இசைத்தலை      உடன்கூறினார்.   இவ்இசை
‘மெய்தெரிவளியினது இசை‘ என்பது பிறப்பியலுள் கூறுவார்.
  

சூ. 4:

ஆ ஈ ஊ ஏ ஐ 

ஓ ஒள என்னும் அப்பால் ஏழும் 

ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப  

(4)
 

க - து: 

மேற்கூறியாங்குக் கொள்க.
 

பொருள்:  அவற்றுள்  ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள   என்னும்  அக்கூற்று
எழுத்து   ஏழும் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையளவினதாக இசைக்கும்.
அதனான்    அவற்றை     நெட்டெழுத்து   எனப்  பெயரிட்டுக் கூறுவர்
ஆசிரியர்.    அவற்றுள்     என்பது     அதிகரித்தது.    பிற விளக்கம்
மேற்கூறியாங்குக்    கொள்க.
  

சூ. 5:  

மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே
(5)
 

க - து: 

மாத்திரைபற்றி எழுத்துக்கட்குப் புறனடை கூறுகின்றது.
 

பொருள்:எழுத்துக்களுள்   எந்த ஒரு எழுத்தும் விகார வகையானன்றி
இயல்பாக   மூன்றுமாத்திரையளவிற்றாய்   இசைத்தல் இன்று எனக்கூறுவர்
ஆசிரியர்.
 

எழுத்தும் என்னும் முற்றும்மை விகாரத்தான் தொக்கது. விகாரவகையான
 இசைக்கும் என்பது குறிப்பெச்சம், அஃதாமாறு மேற்கூறுப.
 

சூ. 6 :

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய 

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்  

(6)
 

க - து: 

எழுத்தோசை நீண்டு அளபெடையாமாறும், அதற்குக் காரணமும கூறுகின்றது.