எ - டு :கேண்மியா - வரகு - அஃகம் எனவரும். மூன்றும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றொக்கது. |
முதற்சூத்திரத்துக்கூறிய எழுத்து முப்பத்து மூன்றனுள் உயிரும் மெய்யும் இவையென முப்பது எழுத்துக்களைப் பின்னர் விதந்து கூறிவிட்டமையான் எஞ்சியவை சார்ந்துவரல் மரபினவாகிய மூன்றுமே யாதலின் அவற்றை ஏனைமூன்று, எனச் சுட்டினார். இதனாற் சார்பெழுத்துக்கட்கு ஏனையெழுத்து என்பதும் ஒருபெயராயிற்று. இவை புள்ளிபெற்று ஒலிக்கும் என்க. இவற்றுள் ஆய்தம் புள்ளியாகவே பிறத்தலின் அதன் தன்மையை உடன்சுட்டி ‘‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி’’ எனக் கூறினார். மற்றையிரண்டும் புள்ளிபெறுதலைப் பதினாறாம் சூத்திரத்தாற் கூறுவார். |
சூ. 13: | அரையளபு குறுகல் மகரம் உடைத்தே |
| இசையிடன் அருகும் தெரியுங் காலை |
(13) |
க-து: | மாத்திரையளவு பற்றி மெய்யெழுத்துக்களுள் ஒன்றற்குப் புறனடை கூறுகின்றது. |
பொருள்:பதினெண்மெய்களுள் இதழியைந்து மூக்குவளியாற் பிறக்கும் மகரப்புள்ளி எழுத்து, தனக்குரிய அரைமாத்திரையினின்று குறுகி ஒலித்தலும் உடையதாகும். அதனை ஆராயுமிடத்து அங்ஙனம் ஒலிக்குமிடம் சிறுபான்மையாகும். இசையென்பது ஈண்டு ஒலி என்னும் பொருள்பட நின்றது. குறுகுமிடம் பின்னர்க்கூறப்படுதலின் இது கூறுவாம் என்னும் உத்தி. |
எ - டு :திசையறி மீகானும் போன்ம் எனவும், தரும் வள்ளல் எனவும் வரும். |
குறுகலும் என்னும் உம்மைதொக்கது. ‘அரையளபு’ என்பது செம்பாதி என்னும் பொருள் நயம் தோன்ற நிற்றது. |
சூ. 14: | உட்பெறு புள்ளி உருவா கும்மே |
(14) |
க-து: | மேற்கூறிய மகரக்குறுக்கத்திற்கு உருவும் ஒலிஅளவும் கூறுகின்றது. |
பொருள்: அரையளபு குறுகும் மகரம் இதழியைந்து பிறவாமல் இதழ்சிறிது உள்வாங்க ஒடுங்கிப்பெறும் ஒலியளவிற்கேற்ப உருவாகி நிற்கும். உட்பெறுதலாவது இதழ் உள்மடங்கி நிற்றல். இதழ் மடங்கும் என்பது ‘‘இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்’’ என்பதனாற் பெற்றாம். |