அரைமாத்திரையுற்றுவரும் மகரம் வாய்இதழ்கள் நன்கு இயைய உருவாகும். குறுகிய மகரம் இதழியையாமல் சிறிது உள்மடங்கி நிற்க உருவாகும் என்பார், ‘‘உட்பெறு புள்ளி உருவாகும்’’ என்றார். இதனான் அதன் ஒலிப்பளவும் தோன்ற வைத்தார். |
ஒப்பக்கூறல் என்னும் உத்தியான், முழுமகரத்திற்கும் இதற்கும் வரிவடிவின்கண் வேற்றுமை தோன்ற அவ்வெழுத்தகத்தே புள்ளி (கீற்று) அடையாளம் செய்து கொள்ளப்பெறும். எல்லா எழுத்துக்கட்கும் வடிவ இலக்கணங்கூறும் பிறப்பியலுள் இதனைக்கூறாமல் ஈண்டே கூறினர், ஒருவழிக்கூறல் என்னும் உத்திபற்றி என்க. இதனை மொழிமரபின்கண் வையாமல் ஈண்டு வைத்ததற்கும் அதுவே காரணம் என்க. எடுத்துக்காட்டு மேற்காட்டப்பெற்றது. இதன் இக்கால வரிவடிவம்(ம்). இடைக்கால வடிவமும் ஆசிரியர் காலத்து வரிவடிவமும் காணுமாறில்லை. |
சூ. 15: | மெய்யின் இயற்கை புள்ளியொடு(ம்) நிலையல் |
15 |
க-து: | மெய்யெழுத்துக்களின் இயல்பாமாறு கூறுகின்றது. (புள்ளியென்பது, ஒலியணுக்களைக்குறிக்குமொருபெயர். அது வரிவடிவிற்கும் பொருந்த அமைந்தது) |
பொருள்: பிறப்பியலுட் கூறப்பெறும் முறைமையான் உருவாகி வடிவுபெறும் மெய்யெழுத்துக்களின் தன்மையாவது அவை ஒலிப்புடையனவாயும் நிற்கும். |
புணர்ச்சி விகாரத்தாற் குன்றிய ‘‘புள்ளியொடும்’’ என்ற உம்மையாற் புள்ளியொடுநில்லாமல் உயிரொடு இயைந்து உயிர் மெய்யாயும் நிற்கும் என்று கொள்க. (உயிர்மெய்=உயிர்க்கும்மெய்) |
உயிரெழுத்துக்களை வகுத்து அவற்றின் அளவு கூறிய வழி ஓரளபிசைக்கும் ஈரளபிசைக்கும் என அவை இசைக்கும் தன்மையை உடன் ஓதினார். ஒலிப்பின்றி உருவாகும் மெய்யெழுத்தினை அங்ஙனங் கூறாமல் ‘‘மெய்” ஒலித்தற்குரியது என்பதுதோன்ற ‘‘மெய்யின் அளபே அரையென மொழிப’’ என்று தோற்றுவாய் செய்து இச்சூத்திரத்தான் அதன் ஒலிக்கும் இயல்பினைச்சுட்டி, “மெய்யின் இயற்கை புள்ளியொடும் நிலையல்” என்றார் அஃது உயிர்ப்புற்று இசைக்கும் இயல்பினைப் பதினேழாஞ் சூத்திரத்தாற் கூறுவார். |
இனி ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’ என்றாற் போல அதன் அளவையும் ஒலிக்குமியல்பையும் உடன் கூறாமைக்குக் காரணம், அஃது ஒலிப்பின்றி உருவாதலும், உயிர்ப்பு |