நூன்மரபு109

இச்சூத்திரம்   மெய்யெழுத்துக்கள்      மயங்கி     (கூடி)    நிற்கும்
நிலைபற்றியதெனினும் ‘‘அவற்றுள் லளகான் முன்னர்’’ எனவும்  ‘‘இயையின்
டகாரமாகும்’’  எனவும்  தனிமெய்களின்  இயல்பைத்  தொடர்மொழிகளாற்
கூறுமிடத்து எடுத்துக்கொண்ட  மெய்கள்  எழுவாய்  முதலியவாக  ஆகிக்
குறித்துவருகிளவியாகப்  புணர்தலின்  அவை  மொழிநிலைமை   எய்துதல்
நோக்கி ஈண்டு வைக்கப்பட்டதென்க.
 

சூ. 48:

யரழ என்னும் மூன்றுமுன் ஒற்றக்

கசதப ஙஞநம ஈரொற் றாகும் 

(15)
 

க-து:

மொழியாக்கத்தின்கண்   ஒருமொழியிடத்து  இரண்டு  ஒற்றுக்கள்
இணைத்து நிற்குமாறு கூறுகின்றது.
 

பொருள்:  தனிமொழியின் இடையே யரழ என்னும்  மூன்றும் ஒற்றாய்
முன்நிற்க அவற்றின் பின்னர்க் கசதப ஙஞநம  என்னும் எட்டும்  ஒற்றாய்த்
தனித்தனி இணைந்து ஈரொற்றாக நிற்றற்காகும்.
 

பின்னர்ச் ‘‘செய்யு ளிறுதிப்  போலி  மொழிவயின்’’  எனக்  கூறுதலின்
இவை இடைநிற்பவை என்பது பெறப்பட்டது.  சேய்க்குன்றம்,  மலர்க்கொடி,
யாழ்ப்பத்தர் என்றாற்போலப் புணர்மொழிக்கண் வருபவை பின்னர்ப் புள்ளி
மயங்கியலுள்  கூறப்பெறும்  விதியான்  மிக்குவருவனவாதலின்,  இயல்பாக
வருபவை  ஒருசொற்கண்ணேயாம்  என்பது  தோன்ற ‘‘ஈரொற்று  ஆகும்’’
என்றார்.
 

எ - டு :  ஏய்க்கும்,  வாய்ச்சி, பாய்த்துள்,  வாய்ப்பு,   வேய்ங்குழல்,
வேய்ஞ்சிறை, ஆய்ந்தான், வேய்ம்புதல் எனவும்  ஈர்க்கு,  நேர்ச்சி, கீர்த்தி,
பார்ப்பு,  ஈர்ங்குழல்,   கூர்ஞ்சிறை,   நேர்ந்தான்,   கூர்ம்பனை  எனவும்
வாழ்க்கை, சூழ்ச்சி,   வாழ்த்து,   காழ்ப்பு,  பாழ்ங்கிணறு,   பாழ்ஞ்சிறை,
வாழ்ந்தார், பாழ்ம்மதில் எனவும் வரும்.
 

இவற்றுள் வேய்ங்குழல் என்றாற்போல இருசொல்லாக நிற்பவை தொகை
மொழிகளாம்.    ஏனையவை     தனிமொழிகளாம்.    தொகைமொழிகள்
ஒருசொல்நடையின என்பது எச்சவியலுள் பெறப்படும்.
 

உரையாசிரியன்மார்   இச்சூத்திரம்    மெய்ம்மயக்கவிதி   கூறுவதாகக்
கொண்டு பொருள்கூறி ஈண்டுவைத்தமைக்கு அமைதியும்  கூறுவர். இந்நூல்
நெறியையும், மயக்கம் என்பது ஒன்றனொடு ஒன்றுமயங்குதல்  என்பதையும்
ஓராது, யரழ முன்னர் மொழிமுதல்மெய்யும் ஙகரமும்மயங்குமென ஆசிரியர்