நூன்மரபு119

பகுத்துக்கொள்ளப்படும்  என்பதை  உணர்த்தவுமாம்.  இதனை  வேற்றுமை
நயம் என்று கூறுவர் உரையாளர். அவற்றுள் முதலாக  வருதற்குரியவையும்
அவை வருமாறும் மேற்கூறுப.
 

சூ. 61: 

க த ந ப ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே

(28)
 

க-து: 

மொழிமுதற்கண் மெய்கள் உயிர்மெய்யாகவே வருமென்றதனான்
அவை   வருமாறு  கூறத்தொடங்கி  இச்சூத்திரத்தான்  எல்லா
உயிரொடும் வருவன இவை எனக் கூறுகின்றார்.
 

பொருள்:  க த ந ப ம  என்னும்  ஐந்து  மெய்களும்  ஒவ்வொன்றும்
பன்னிரண்டு  உயிரிசைகளோடு  கூடி   முதலாதற்குச்   செல்லும்.   உயிர்
என்றது உயிரெழுத்தின் இசையினை. ஆர்-அசை.
 

எ - டு:   கனி, கானல், கிணை, கீரி,  குவளை,  கூந்தல்,  கெண்டை,
கேளிர், கைதை, கொடை,  கோடல்,  கௌவை  எனவும்,  தளை,  தாழை,
திங்கள்,  தீனி,   தும்பை,   தூணி,    தெவ்வர்,     தேவர்,   தையல்,
தொண்டு-தோள்  தௌவை எனவும், நளி, நாரை,  நிலம்,  நீளம்,  நுங்கு,
நூல், நெற்றி, நேயம்,  நைவளம்,  நொய்யல்,  நோன்பு,  நௌவி எனவும்,
பழம், பாகன், பிறை, பீடு, புரை, பூழி, பெடை, பேடை,  பைதல், பொருப்பு,
போர்வை, பௌவம்  எனவும்,  மழை,  மாடம்,  மின்னல்,  மீளி,  முருகு,
மூக்கு,  மெய்,  மேவல்,  மையல்,  மொழி,  மோனை,  மௌவல் எனவும்
வரும்.
  

சூ. 62: 

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே

(29)
 

க-து: 

சகர  மெய்  ஒன்பது  உயிரிசைகளொடு  கூடி  உயிர்மெய்யாய்
வருமென்கிறது.
 

பொருள்:சகரமாகிய எழுத்தும் அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாத
ஏனைய  உயிரோசைகளுடன் மேலனவற்றைப் போல மொழி  முதலாதற்குச்
செல்லும்.  உம்மை எச்ச உம்மை. மூன்றும் என்னும் முற்றும்மை  தொக்கது.
கிளவி - கிளத்தலை உடையது என எழுத்தின் மேலாயிற்று.
 

எ - டு :   சாரல்,  சின்னம், சீரை, சும்மை, சூழ்ச்சி, செல்வம், சேவல்,
சொன்றி, சோனை எனவரும்.
 

வடவெழுத்தொரீஇ எழுத்தொடு  புணர்ந்து  செய்யுட்சொல்லாக  வரும்
வடசொற்களை   இவ்வதிகாரப்   புறனடையாற்  கொள்க.  எ - டு: சடை,
சதுக்கம், சமன், சமழ்ப்பு, சகடம் எனவரும்.