நூன்மரபு121

சூ. 66: 

முதலா ஏன தம்பெயர் முதலும் 
(3)

க-து: 

எஞ்சிய மெய்களைப் பற்றியதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  உயிர்மெய்யாய் மொழி முதலாகா   எனக்கொள்ள  வைத்த
ஙடணரலழளறன என்னும் ஒன்பது மெய்களும்,  சில  உயிரிசைகளொடுவரா
என  மேல் விலக்கப்பெற்ற ஏனையவும் தம்பெயரைச் சுட்டி வழங்குமிடத்து
முதலாக வரும். முதலாவும் ஏனவும் என உம்மை விரிக்க.
 

எ - டு :  ‘‘சகரக்கிளவியும்’’  ‘‘ஞகாரை    ஒற்றிய   தொழிற்பெயர்’’
“ஙகாரம்  முதல்நா  அண்ணம்’’  ‘‘டகார  ணகாரம்  நுனிநா  அண்ணம்’’
‘‘ழகர  உகரம்  நீடிடன் உடைத்தே’’ ‘‘யவமுன்வரினே’’ ‘‘ஆவயின் னகரம்
ஒற்றா கும்மே’’ ‘‘நிற்றல்  வேண்டும்  ரகரப்  புள்ளி’’  ‘‘நான்கன்  ஒற்றே
லகார  மாகும்’’ ‘‘நான்கன் ஒற்றே றகார மாகும்”  “ளகார  இறுதி  ணகார
இயற்றே” (புள்ளி-101) எனவரும்.
 

இச்சூத்திரத்தாற்பயன்  அகரமுத  னகர இறுவாய் என்புழி நிலைமொழி
யீற்றுலகரம் கெடுதலும்  பெயர்,  வினைகட்கு  ஓதிய  புணர்ச்சிவிதிகளைப்
பெறுதலுமாம்.
 

சூ. 67: 

குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் 

(34)
 

க-து:

குற்றியலுகரம்  மொழிக்கு  முதலாமாறும் அவ்வழி அதன் சார்பும்
பற்றுக் கோடும் அமையுமாறும் கூறுகின்றது.
 

பொருள்:  சார்பெழுத்து      மூன்றனுள்         குற்றியலுகரஎழுத்து
முறைப்பெயர்களுள் முன்னிலைப்பெயர் ஒன்றன் மருங்காகி,  ஒற்றாய்நிற்கும்
நகரப்புள்ளியின் மேல்உள்ள நகர மெய்யை  ஊர்ந்து  மொழிக்குமுதலாகும்.
எ - டு :நுந்தை.
 

மெய்யெழுத்துக்கள்   உயிரிசையோடு    கூடி    முதலாமாறு   போல
இச்சார்பெழுத்து உயிரியல்பாய் வந்து  மெய்யொடுகூடி  முதலாகும்  என்க.
துணையும் பற்றுக்கோடுமின்றிச்  சார்பெழுத்துக்கள்  தனித்தியங்காவாதலின்
‘‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்’’ என்றார்.
 

நுந்தை என்பதனுள் முதல் நகரம்  பற்றுக்கோடு;  இரண்டாவது  நகரம்
சார்பு. மொழியிறுதிக் குற்றியலுகரம்  வல்லொற்றுக்களைப்  பற்றுக்கோடாகக்
கொண்டு   வருதல்போல    மொழிமுதற்    குற்றியலுகரம்    நகரமாகிய
மெல்லெழுத்தினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வருமென்க.