அளபெடையாக ஈறாகும் என்பது கருத்து. ‘‘ஈற்றுநின் றிசைக்கும் ஏஎன் இறுதி, கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே’’ (இடையியல்-38) என்பதனான் “மெய்யோடுகூடி ஈறாகுங்கொல்’’ என்னும் ஐயம் நீங்க, ‘ஆகாது’ என வலியுறுத்தியவாறு. |
சூ. 72: | ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே |
(39) |
க-து: | ஒகரஉயிர் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய எகரமேயன்றி ஒகரமும் நகர மெய்யொடு கூடிவருதலல்லாத இடத்து அவ்விலக்கணத்ததேயாகும். என்றது; ஒகரம் நகரமெய்யொடு கூடியல்லது பிற மெய்களொடுகூடி மொழியிறுதிக்கண் வாராதென்றவாறு. |
எ - டு : நொக்கொற்றா-நொஅலையல் எனவரும். |
சூ. 73: | ஏஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை |
(40) |
க-து: | ஏகார ஓகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது. |
பொருள்: ஏகார ஓகாரங்கள் என்னும் உயிரெழுத்துக்கள் ஞகர மெய்யொடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களொடு கூடி ஈறாகும். |
பொருட்பேற்றால் ஏனையமெய்களொடு கூடி ஈறாகும் என நின்றதெனினும், இவற்றிற்கும் இனிவருவனவற்றிற்கும் ஙகர மெய் ஒழியக்கொள்க. என்னை? ஙகரம் ஒருமொழியின் முதலிலோ ஈற்றிலோ மொழியாக்கம் பெற்று வாராமையானும், குற்றியலிகரம் குற்றியலுகரம் இதனை ஊராமையானும் என்க. |
“இஃது ஒருதலையன்மை’’ என்னும் உத்திக்கு இனம். |
எ - டு சே, தே, நே, பே, மே, வே எனவும் கோ, சோ, அந்தோ, நோ, போ, மோ, தெய்யோ, அரோ எனவும் வரும். ஏனைய வந்தவழிக்காண்க. இவற்றிற்கு ஈற்றசை முதலாய இடைச்சொற்கள் புணர்ந்த மொழிகளைக் காட்டுதல் இந்நூல் நெறிக்கு ஒவ்வாதென்க. |
சூ. 74: | உஊ காரம் நவவொடு நவிலா |
(41) |
க-து: | உகர ஊகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது. |
பொருள்: உகர ஊகாரம் ஆகிய உயிரெழுத்துக்கள் நகரமெய் வகரமெய் ஆகியவற்றொடு கூடி மொழியிறுதிக்கண் இசைக்கமாட்டா. ஏனைய மெய்களோடு கூடி இசைக்கும் என்றவாறு. |