நூன்மரபு127

கரி, கலி, புவி, கழி, மறி,  நனி  என  இகரம்  வரும்.  ஞகர  நகரத்தொடு
வந்துழிக்காண்க.  சீ,  உடீ, தீ, நீ, பீ, மீ, குரீ,   வீ  என  ஈகாரம்  வரும்.
ஏனையவற்றொடு  வந்துழிக்காண்க.  கை, அசை,  விதை, மஞ்ஞை, உடை,
கணை, தை, நை, பை, மை, ஐயை, சுரை, மலை, வை, மழை, மிளை, இறை,
சுனை  என   ஐகாரம்   வரும்.   இவற்றுள்  எடுத்துக்காட்டு  இல்லாதன
மொழியாக்கம்  பெறவில்லை  என்பதன்றி  வாராமைக்கு  ஏதுவின்மையான்
வந்துழிக்காண்க என்று கூறப்பட்டது.
 

இனி   ‘எல்லாம்’    என்ற    மிகையான்,    மொழிக்கீறாகா   என்ற
உயிர்மெய்களும் - இறுதியும் முதலுமாகா ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண்
ஈறாக நின்று புணரும்  எனக்கொள்க.  மிகப்பெரிது,  நுப்பெரிது,  வுச்சிறிது
எனவும் ஙக்களைந்தார் எனவும் வரும்.
 

இந்நூற்பாவிற்கு   உரையாசிரியர்,   ஈறாகாதெனப்பெற்றவை தம்பெயர்
கூறும் வழி எஞ்சுதல் இல எனக் கூறுவர். அதுகுன்றக் கூறலாம் என்க.
 

சூ. 78:

ஞணநம னயரல வழள என்னும்

அப்பதி னொன்றே புள்ளி யிறுதி

(45)
 

க-து: 

புள்ளியாகிய மெய்யெழுத்துக்களுள் மொழிக்கீறாவன கூறுகின்றது.
 

பொருள்: ஞண   நமன   யரல   வழள   என்னும்   அப்பதினொரு
புள்ளிமெய்களே  மொழியிறுதியாக வரும். ஏகாரம் தேற்றம்.
 

எ - டு: உரிஞ்,  விண்,  வெரிந்,  வளம், வான், செய், வேர்,  வேல்,
தெவ், யாழ்,  வேள் எனவரும்.   வெரிந்   என்பது  வெந் எனவும் வரும்.
மெல்லெழுத்தாதல் இனம்பற்றி னகரத்தை இடையே சேர்த்துக் கூறினார்.
 

சூ. 79:

உச்ச காரமொடு நகாரம் சிவணும்
(46)
 

க-து:

நகரப்புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும் என்கிறது.
 

பொருள்: நகரப்புள்ளி  மேற்கூறிய   சகரஉகரத்தைப்போல  இரண்டே
சொற்களில் ஈறாக வரும்.
 

எ - டு : வெரிந், பொருந் எனவரும் - வெரிந் முதுகுப்புறம்.
 

சூ. 80:

உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

அப்பொருள் இரட்டாது இவணை யான
(47)
 

க-து: 

ஞகரப்புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாகவரும் என்கின்றது.