நூன்மரபு129

பொருள்:னகரப்புள்ளியை    ஈறாக     உடைய     (ஈரெழுத்தொரு
மொழியல்லாத) தொடர் மொழிகளுள்,  மகர  ஈற்றுத்தொடர்  மொழிகளாக மயங்குதலினின்று  வரையறுக்கப்பெற்றவை,  அஃறிணைப்   பொருள்மேல் குற்றமறக்கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் எனக்
கூறுவர் புலவர்.
 

எ - டு :  எகின், செகின்,  விழன்,  பயின்,  குயின்,  அழன்,  புழன்,
கடான்,  வயான்  எனவரும்.  இவை    நச்சினார்க்கினியர்   காட்டியவை.
இச்சூத்திரத்து ஒன்பது என்னும் வரையறை   தெளிவுபடுமாறில்லை.  கடன்,
கவின்  என்றாற்   போல்வனவும்      மகரமாக    மயங்குதலின்மையின்
இச்சூத்திரத்தின்  பாடம் பிறழ்ந்திருக்கலாமெனக் கருதவேண்டியுள்ளது.
 

மொழிமரபு முற்றியது.
 

3. பிறப்பியல்
 

மேல்இரண்டியல்களுள்   கூறப்பெற்ற   எழுத்துக்களின்   பிறப்பமைதி கூறுதலின்  இது   பிறப்பியல்   எனப்   பெயர்   பெற்றது.   பிறப்பாவது கருக்கொண்டு உருப்பெற்று வடிவமைந்து வெளிப்படும் நிலையாகும்.
 

எழுத்துக்களை   வரையறை  செய்து கொண்ட பின்னரே அவைபற்றிய
பிறப்பியல்களைக் கூறுதல் முறைமையாகலின் நூன்மரபிலும் மொழிமரபிலும்
அவற்றின்   தொகைகளையும்,   இயக்கங்களையும்,   வரையறை   செய்து,
அவற்றின் பின்னரும், சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியாயும்
தொடருங்கால்  அவற்றின்  ஈற்றிலும்   முதலிலும்  நிற்கும்  எழுத்துக்கள்
ஓரியல்பும்   மூன்று   திரிபும்    கொள்ளும்    இயல்பினை   அவற்றின்
பிறப்பமைதிகாட்டி  உணர்த்தல் வேண்டுதலின் புணரியலுக்கு  முன்னருமாக
இப்பிறப்பியலை ஆசிரியர் ஓதுகின்றார்.
 

இங்ஙனம்   எழுத்துக்களின்  பிறப்பியல்புகளைக்  கூறுதலான்  எய்தும்
பயனாவது:   எழுத்துக்கள்   வளியிசையான்    உந்தப்பெற்று   உருவுற்று வன்மையும்  மென்மையும்   இடைமையுமாக   ஓசையுற்று   ஒலிக்குமாறும்,
அவற்றின்   வடிவங்கள்   அமையுமாறும்   அவை   ஒன்றொடு   ஒன்று
இடையீடின்றித்   தொடருங்கால்   அவை   இயல்பும் திரிபும் எய்துமாறும்
பிறவும்  தெற்றெனப்  புலப்பட்டு  மேற்கூறப்பெறும்  புணர்ச்சி  விதிகட்கு அறிவியற் காரணம் இவை என உணர்ந்து கோடலாம்.