தன்மைக்குரிய இகரம் உலகவழக்கின்கண் முன்னிலையிடத்ததாய்ப் பிறழ்ந்த போது நூம், நும்; நூன், நுன் என்பவை நீம், நிம்; நீன், நின் எனத் திரிபுற்றன. எனினும் முன்னிலைக்குரிய உகர ஒலியின் நினைவும் மாறாமல் நீமு, நீனு எனப் பரவை வழக்கில் வழங்குவனவாயின. | இனி, மொழிக்கூறுகளை ஆய்ந்து செம்மை செய்து இலக்கணவழக்காக அமைத்த காலத்துப் படர்க்கைப் பெயருள் திரிபு நேராமையான் அவற்றை அவ்வாறே அமைத்துக் கொண்டு, தன்மை, முன்னிலைச் சொற்களை மட்டும் இயல்நூலார் ஒரு மரபிற்கு உட்படுத்தியுள்ளனர். | அங்ஙனம் நியமிக்குங்கால் யாம், யான்; எம், என் என்பவற்றைத் தன்மைக்கும் நூம், நும்; நூன், நுன்; உன் என்பவற்றை முன்னிலைக்கும் அமைக்கப்பட்ட நிலையில், சேரி வழக்கில் இகரம் முன்னிலைக்கண் வழங்குதலை நோக்கி நீயிர், நின் என்பவற்றையும் முன்னிலைப் பெயராகக் கொள்வாராயினர். | தொல்காப்பியம் தோன்றுதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்னரே தமிழ் இலக்கணம் செய்யத் தொடங்கிய சான்றோர் இலக்கணக் குறியீடாகச் சில சொற்களைச் செந்தமிழ்படுத்திய போது முன்னிலை ஒருமைக்கண் நீ என்பதை எழுவாய்க்கும் நின் என்பதை வேற்றுமைக்கும், பன்மைக்கண் நீயிர் (நீஇர்) என்பதை எழுவாய்க்கும் நும் என்பதை வேற்றுமைக்கும், இலக்கணக் குறியீடாக நியமித்துள்ளனர். அந்நெறி பற்றியே யான், யாம் என்பவை எழுவாய்க்கும் என், எம் என்பவை வேற்றுமைக்கும் அமைவனவாயின. எனினும் நீயிர் - நும் என்பனவற்றுள் எது மூலச்சொல் என்பதை உணரும் வகையில் நும் என்பதற்குச் சிறப்புக் கொடுத்து இலக்கணங் கூறலாயினர். அம்மரபினை நன்குணர்ந்த தொல்காப்பியனார் நீயிர் என்பது நும் என்பதன் திரிபே என்பது புலப்பட அது திரிந்த நெறியை இவ்வதிகாரத்துள் (சூ - 326) எடுத்துக்கூறி, அதனை வலியுறுத்துவாராய்ச் சொல்லதிகாரத்தும் ‘நும்மின் திரிபெயர்’ என்று ஓதினார். ஆதலின் முன்னிலைப் பெயர் எனற்குரியது நும் என்பதே என்பது தோன்ற ‘‘நும்மென் ஒருபெயர்’’ என்றார். பிற விளக்கங்களை எனது மூவிடப் பெயர் ஆய்வுரையுள் கண்டு கொள்க. |
|
|